தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2021ம் ஆண்டு நடைபெற வேண்டிய சூழ்நிலையில் அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற எம்.பி.யான டி.ஆர்.பாலு அறிவித்து உள்ளார்.

ஏற்கெனவே நாடு முழுவதும் காலியாக இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் (செப்டம்பர் 29) தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகம், நாகாலாந்து, ஒடிசா, உத்தரப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மணிப்பூரில் காலியாக உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும், பீகாரில் காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் நவம்பர் 7 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், வசந்தகுமார் மறைவு காரணமாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காலியாக இருக்கிறது. குறிப்பாக குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகள் காலியாகி 6 மாதங்கள் நிறைவுபெற்றுவிட்டது. தமிழகம் மட்டுமின்றி, அசாம், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் காலியாக இருக்கும் சட்டசபை மற்றும் லோக் சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப் போவதில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக எம்எல்ஏக்களாக இருந்த கே.பி.பி.சாமி, காத்தவராயன், ஜெ.அன்பழகன் ஆகியோரின் மறைவால் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. ஒரு தொகுதி காலியானால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். இதன்படி, திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

தமிழகத்தில் வரும் 2021 (அடுத்த ஆண்டு) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான களப்பணிகளை தொடங்கிவிட்டனர். வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்காக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள திமுக, மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்ட நலத்திட்டங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்வது, தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் பிரசார பணிகள் உள்ளிட்ட தேர்தலை எதிர்கொள்வது பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலுக்கான, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க மூத்த தலைவர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:

1. பொருளாளர் டி.ஆர்.பாலு,
2. துணைப்பொதுச்செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன்
3. துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா
4. துணைப்பொதுச்செயலாளர் அந்தியூர்செல்வராஜ்
5. திமுக எம்.பி., கனிமொழி
6. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா
7. செய்தி தொடர்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்
8. பேராசிரியர் ராமசாமி

தேர்தல் அறி்க்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர், அக்குழுவிற்கான முதல் கூட்டத்திற்கு குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

``தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்’ நடைபெறும். அதுபோது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.