உட்கட்சி குழப்பத்தால் சிக்கித் தவிக்கும் அதிமுகவிற்கு, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள சிஏஜி அறிக்கையால் மேலும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது, அந்த கட்சிக்கு மேலும் தலைவலியாக அமைந்து உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக ஆட்சிக்கு வந்த உடன் நிர்வாகத்தைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன் படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் நோபல் பரிசு பெற்ற நிபுணர் உள்பட 5 பேர் கொண்ட குழு நிமிக்கப்பட்டுள்ளது, இந்தியாவையே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தது.

இவற்றுடன், தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் நிர்வாகத் திறமை வாய்ந்த அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தைச் சீரமைக்கும் பணியும் தற்போது வேகமாக துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், ஒன்றிய கணக்குத் தணிக்கையாளர் குழுவின் அறிக்கையானது, கடந்த 2017-18 ஆம் ஆண்டு அப்போதைய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், அப்போது அதிமுக அரசின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இந்த கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டது.

இதன் காரணமாகவே, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஒன்றிய தணிக்கையாளர் குழு அறிக்கை வெளியிடாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில், தற்போதைய திமுக அரசு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, உடனடியாக சட்டப் பேரவையில் சிஏஜி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, தொடர்ந்து 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், சிஏஜி அறிக்கை வெளியிட அதிமுக எப்போதுமே ஆர்வம் காட்டியதில்லை. 

அதற்கு முக்கிய காரணம், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்ட பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் அதிமுகவின் வெற்றிக்கு இது தடையாக இருக்கும் என்பதால், இது அப்படியே நிலுவையில் வைக்கப்பட்டது. தற்போதைய அரசு பழைய ஆட்சியில் நடைபெற்ற திட்டங்களில் நடந்த ஊழல்களை தூசித் தட்ட தொடங்கி உள்ள அதே நேரத்தில், தமிழகத்தின் லஞ்ச ஒழிப்புத் துறை டிஐஜி யாக கந்தசாமி பொறுப்பேற்றபிறகு, சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியதும், தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்டப்டது.

இந்த நிலையில் தான், “முறையற்ற நிர்வாக சீர்கேட்டால் அரசுக்கு 30 ஆயிரம் ரூபாய் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக” சிஏஜி அறிக்கையின் மூலம் உண்மை தெரிய வந்திருக்கிறது.

அத்துடன், “மின்சாரத்துறையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும். தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாடநூல் கழகத்தின் தொகை கோரிக்கையை சரிபார்க்கத் தவறியதால் 23 கோடியே 27 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக, “தமிழக அரசுக்கு அதிக பட்சமாக மின்துறை சார்பில் 13 ஆயிரத்து 176 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த 2018-19 ஆம் ஆண்டில் வருவாய் 2,533.90 கோடி ஆக அதிகரித்தாலும், கூடுதல் செலவு 7,396.54 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது” என்பதும் இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும், “உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு, 2018-19 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு 9,126 கோடி ரூபாய் உதவித் தொகையைப் பெற்றது என்றும், ஆனாலும், செயல்பாட்டு அளவுகளை எட்டாததாலும், மின் கட்டணத்தை உயர்த்தாததாலும் எதிர்பார்க்கப்பட்ட நிதி மாற்றங்களை அடைய முடியவில்லை எனவும் இதன் மூலமாக தெரிய வந்திருக்கிறது.

முக்கியமாக, “சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தால் 72 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளது” என்பதும் தெரிய வந்திருக்கிறது.

அதே போல், நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது மூலமாகவும், பொது நூலகங்களில் மின்னணு சாதனங்களுக்கான ஒப்பந்தம் பெற்றது தொடர்பாக என பல்வேறு விசயங்களில் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக இழப்பு ஏற்பட்டுள்ளது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதனால், உட்கட்சி குழப்பத்தால் சிக்கித் தவிக்கும் அதிமுகவிற்கு, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள சிஏஜி அறிக்கையால் மேலும் சிக்கலும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.