கடந்த செப்டம்பர் 15-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காண தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு  வந்த பின்னர் 0.1% சதவீத மாணவர்கள் மட்டுமே மருத்துவத்துறை படிப்புக்கு செல்கின்றனர் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க 2 வாரம் அவகாசம் தேவை என அவரது செயலாளர் பதிலளித்தார். அதைத்தொடர்ந்து, 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி அமைச்சர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்‌, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார்‌, சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்‌, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்‌ ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். 

அதன்பிறகும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்னபதால், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ``மருத்துவக் கல்வியில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை; அழுத்தம் தராமல் துரோகம் இழைக்கிறது அதிமுக அரசு! இணைந்து போராட அழைத்தேன்; @CMOTamilNadu-க்கு துணிச்சல் இல்லை! களம் காண்கிறது திமுக! ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதினேன், ‘3-4 வாரங்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்’. இதில் அவகாசம்  என்பது மசோதாவை நீர்த்துப்போகச்செய்யும். அவரைச் சந்திக்கச் சென்ற தமிழக அமைச்சர்களுக்கும் இதையே தான் சொல்லியிருக்கிறார். மாணவர் நலனையும், சட்டத்தின் மாண்பினையும் திமுக பாதுக்காக்க வேண்டிய  தருணத்துக்கு திமுக வந்துவிட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஆளுநர் மாளிகை முன்பு 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5% ் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமனதாக 15.9.2020 அன்று நிறைவேற்றி,  தமிழக ஆளுநருக்கு அனுப்பியும், அவர் அந்த மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்க முன்வரவில்லை. ஒரு மாதத்திற்கும் மேல் இந்த மசோதா மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதால் - தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நீட்  தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை நினைத்துப் பார்க்க  முடியாத நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார்கள்.

 இந்நிலையில் திமுக சார்பில் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதி, இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குங்கள் என்று வலியுறுத்தினேன். இதற்கு பதிலளித்துள்ள தமிழக ஆளுநர் , “நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன். இது குறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஒருமாத காலம் அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் - குறைந்தபட்சம் மேலும் ஒரு மாதம் என்பது 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப் போக வைப்பதாகும்.

 அதே கடிதத்தில், “மூன்று அல்லது நான்கு வாரங்கள் தேவை என்பதைத் தன்னைச் சந்தித்த தமிழக அமைச்சர்கள் குழுவிடமும் தெரிவித்திருக்கிறேன்” என்றும் ஆளுநர் கூறியுள்ளார். ஆனால் ஆளுநரைச் சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் குழு, “கால அவகாசம் வேண்டும்” என்று ஆளுநர் சொன்னதையே தமிழக மக்களிடமிருந்து திட்டமிட்டு மறைத்து விட்டார்கள். இது ஒருபுறமிருக்க, “பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துங்கள். இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தருகிறேன்” என்று ஆளுநர் தமிழக அமைச்சர்களிடம் சொன்னதாகவும் ஒரு செய்தி வலம் வருகிறது.

சமூக நீதியைச் சீர்குலைக்கும் அப்படியொரு கருத்து, அந்த சந்திப்பில் முன் வைக்கப்பட்டதா என்பதை அமைச்சர்கள் குழு உடனடியாக  தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.  அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநரை எதிர்த்து  போராடுவதற்கு பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை. 16.10.2020 அன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. கல்லூரிகளில் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான “கட் ஆப்” தேதியை மத்திய அரசே நிர்ணயிப்பதால் - ஆளுநர் கோரும் ஒரு மாத கால அவகாசம் வரை மாநில அரசால் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் - மாணவர்கள் சேர்க்கையை அனுமதிக்காமல் இருக்க முடியுமா என்பது பெருத்த  ஐயப்பாட்டுக்குரிய கேள்வியாக இருக்கிறது.

 எனவே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும் - தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கத் தவறி, மாணவர்களுக்குத்  துரோகம் செய்யும் எடப்பாடி அதிமுக அரசைக் கண்டித்தும் 24-10-2020 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் திமுக சார்பில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று கூறியிருக்கிறார் அவர்.