மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. பல மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில் தமிழக அரசு அதை ஆதரித்தது. இந்நிலையில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய கடந்த செப்.21 ஆம் தேதி அன்று தோழமைக் கட்சிகளுடனான கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தினார்.

கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், முஸ்லிம் லீக், தி.க.தலைவர்கள் மற்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், மாநில அரசு அதை ஆதரிப்பதைக் கண்டித்தும், சட்டத்தைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பாக மாநில, மாவட்ட, நகர, ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் மாவட்ட, நகரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூரில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டத்துக்கு எதிராக திருச்சியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காதர் மொய்தீன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெறுகிறது. திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

காரைக்கால் அருகே நெடுங்காட்டில் திமுக மருத்துவ அணி சாா்பில் குப்பை அள்ளும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதி, நெடுங்காடு கடைத்தெருவில் குப்பை அள்ளும் போராட்டம் நடைபெற்றது.

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் ஊதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் நெடுங்காடு பகுதி முழுவதும் குப்பைகள் குவிந்து, கொரோனா நோயத் தொற்று காலத்தில் மக்கள் பாதிக்கப்படும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வரும் புதுச்சேரி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் குப்பை அள்ளும் போராட்டம் நடத்தப்பட்டது.

காரைக்கால் திமுக மருத்துவா்அணிப்பாளா் மருத்துவா் வி. விக்னேஸ்வரன் போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். அவைத் தலைவா் சதாசிவம், தொ.மு.ச மாநில செயலாளா் ஆராமுதன், தொண்டரணி துணை அமைப்பாளா் மோகன் உள்பட கட்சியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.