திமுக MLA ஜெ.அன்பழகன் சட்டப்பேரவையிலிருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் 2 ஆம் நாள் நிகழ்வு சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று நடைபெற்றது.

DMK member j anbazhagan suspended from Assembly

அப்போது, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், அமைச்சர் வேலுமணியை ஒருமையில் பேசியதாகத் தெரிகிறது. இதனால், அவையில் அதிமுக - திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனையடுத்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சரை ஒருமையில் பேசிய ஜெ.அன்பழகனை சஸ்பெண்ட் செய்ய முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் தலையிட்டு விளக்கம் கொடுத்தார்.

இதன் காரணமாக, ஜெ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. பின்னர், ஆளுநர் உரை குறித்துத் தொடர்ந்து பேசிய ஜெ.அன்பழகனை  சபாநாயகர் அமரும்படி கூறியதால், கோபமடைந்த அவர், சபாநாயகர் அருகே கோபமாக வந்து, ஆளுநர் உரையை கிழித்து, அவர் முன்பு வீசினார். 

இதனால், அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம், சட்டசபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாலும், அவையில் குந்தகம் விளைக்கும் வகையில் பேசி செயல்பட்டதாலும், அன்பழகனை சஸ்பெண்ட் செய்யுமாறு மீண்டும் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பங்கேற்கச் சபாநாயகர் தனபால் அதிரடியாகத் தடை விதித்தார்.

பின்னர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஜெ.அன்பழகன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை 9 ஆம் தேதி வரை, வெறும் 3 நாளாகக் குறைத்து சபாநாயகர் அறிவித்தார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.