கள்ளக் காதலனை விட்டு மனைவி பிரிய மறுத்ததால் கடும் ஆத்திரமடைந்த கணவன், அந்த காதலனை நடுரோட்டில் வைத்து அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனபள்ளி கீழ் பூங்குருதியை சேர்ந்தவர் பாரதி என்ற இளம் பெண், அங்குள்ள பர்கூரை சேர்ந்த கதிரேசன் என்ற இளைஞரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக சென்ற இவர்களுக்கு, தற்போது 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்த சூழலில் தான், தனது உறவினர் ரகுபதி என்பவருடன், பாரதிக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விசயம் கணவன் கதிரேசனுக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவி பாரதியை அழைத்து கண்டித்திருக்கிறார்.

ஆனால், கள்ளக் காதலன் ரகுபதியை பிரிய மனமில்லாத பாரதிக்கு, கதிரேசனின் கண்டிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட சண்டையால் தனது வீட்டில் இருக்க பிடிக்காமல், காதலன் ரகுபதி உடனே சென்று ஓசூர் பாராண்ட பள்ளியில் தனியாக குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார் பாரதி.

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த கணவன் கதிரேசன், “மனைவியை மீண்டும் தன்னுடன் வாழச் சொல்லி” அங்குள்ள பர்கூர் காவல் நிலையம் அருகில் சொந்த பந்தங்களுடன் அவர் பஞ்சாயத்து வைத்திருக்கிறார்.

அப்போது, இந்த கள்ளக் காதலை விட்டு விடச் சொல்லி அங்கிருந்தவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில், “காதலி பாரதியை விட்டு பிரிய முடியாது” என்று, ரகுபதியும் கூறியிருக்கிறார். அத்துடன், “என்னாலும் என் காதலன் ரகுபதியை கை விட முடியாது” என்று, பாரதியும் விடப்பிடியாக இருந்திருக்கிறார். 

இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, எல்லோரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது, பாராதி - ரகுபதி சென்ற வாகனம் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பயண பள்ளியில் சென்ற போது, அங்கு வழிமறித்து நின்ற கணவன் கதிரேசன், மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் கள்ளக் காதலன் ரகுபதியை கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த ரகுபதி, சம்பவ 
இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

 இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “கள்ளக் காதலை கை விட மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவியின் கள்ளக் காதலனை அடித்துக் கொன்றேன்” என்று, கதிரேசன் கூறியிருக்கிறார். 

இதையடுத்து கதிரேசன் மற்றும் அவருக்கு உதவிய அவரது உறவினர்களும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தற்போது, நீதிமன்ற உத்தரவு படி, அவர்கள் அனைவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.