12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 27 வயது இளைஞருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் சாகும்வரை ஆயுள் தண்டனை என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

courtஇந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் வசித்துவரும்  12 வயது சிறுமியை, கடந்த ஜூன் மாதம்    30-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த மாதவன் என்ற 27 வயது இளைஞர், வீடு புகுந்து அத்துமீறி  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.மேலும், அந்த சிறுமியை தொந்தரவு செய்து அடித்தபோது அருகே வசித்தவர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை கீரனூர் மகளிர் போலீசார் கைது செய்து அதன் பின்னர் குற்றவாளி மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் இளைஞரை அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நான்கு மாத காலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும்,குற்றவாளிக்கு ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு , இது போன்ற வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.