அதிமுக முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் என 5 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது கே.பி.அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி, மகன்கள் மற்றும் மருமகள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர்கள் தொடர்புடைய தருமபுரி, சென்னை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கியமாக, “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறையினர், கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தற்போது இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகவும்” கூறப்படுகிறது.

தற்போது, அதிகாலையில் தான் இந்த அதிரடியான சோதனை தொடங்கி உள்ளதால், இதுவரை என்ன மாதிரியான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து, இது வரை எந்த தகவல்களும் வெளியாக வில்லை.

என்றாலும், அதிமுக முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது, அதிமுகவில் பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த சோதனை நடைபெற்று வரும் பகுதிகளில் அதிமுகவினர் தற்போது குவியத் தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக, சோதனை நடைபெற்று வரும் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.