நடிகர் விஜய் பெயரில் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருக்கடையூர் கோயிலில் அர்ச்சனை செய்து, ஹோமம் வளர்த்த நிகழ்வு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

“நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வரவேண்டாம் என்றும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அரசியலுக்கு வர வேண்டும்” என்றும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த ஆண்டு கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் “பீஸ்ட்” படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அந்த படத்தின் இயக்குநர் நெல்சன் எடுத்த நேர்காணல் ஒன்றில், நடிகர் விஜய் தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் குறித்து, உருக்கமாக பேசியிருந்தார். இது பெரும் வைரலானது.

அதாவது, “அம்மா - அப்பா உறவுகள் எப்படி இருக்க வேண்டும்? இதை பத்தி உங்க கருத்து என்ன?” என்று, படத்தின் இயக்குநர் நெல்சன் கேட்டார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் விஜய், “அப்பா ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரத்தோட வேர் மாதிரி. அப்பாக்கும் கடவுளுக்கும் ஒரு வித்யாசம் தான். கடவுள் நம்ம பார்க்க முடியாது, அப்பாவ பார்க்க முடியும்ஃ அது தான் வித்தியாசம்” என்று, அழகாக பதில் அளித்தார். அதாவது,  அண்மைக்காலமாகவே, தனது தந்தையுடன் நடிகர் விஜய் பேசுவதில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், தந்தை குறித்து நடிகர் விஜய் கூறிய இந்த பதில், அவரது ரசிகர்களை அப்படியே நெகிழ வைத்தது. 

இந்த நிலையில் தான், மயிலாடுதுறை அடுத்து உள்ள திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலானது, மிகவும் புகழ் பெற்று திகழ்கிறது.

இந்த அமிர்தகடேஸ்வரர் கோயிலில், “ஆயுஷ் ஹோமம் வளர்த்து காலசம்கார மூர்த்தியை வழிபாடு செய்தால், ஆயுள் விருத்தியாகும்” என்பது,  ஐதிகமாக உள்ளது.

அத்துடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 70 வயது மற்றும் 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்து மணி விழா மற்றும் சதாபிஷேக விழா நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இந்த சூழலில் தான், திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு, அவர் தனது மனைவி ஷோபனாவுடன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்தார்.

அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த எஸ்.ஏ. சந்திரசேகர்  - ஷோபனா தம்பதியினர், அந்த திருக்கோயிலில் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து காலசம்ஹார மூர்த்தி, சுவாமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

அத்துடன், எஸ்.ஏ. சந்திரசேகர்  - ஷோபனா தம்பதியினர், தங்களது மகன் விஜய் பெயரில், அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர்  - ஷோபனா தம்பதியினர்,  அன்னதானம் வழங்கினார்.

தற்போது, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், தனது மகன் விஜய் பெயரில், அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்த நிகழ்வானது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.