திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமிக்கு வலுக்கட்டாயமாகத் தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் ஒருவன், 3 நாட்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விட்டு, அதன் பிறகு அந்த சிறுமியை விரட்டியடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் சினேகா தம்பதிக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். முருகேசன், அந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் காய்கறிக் கடை வியாபாரம் செய்து வருகிறார். 

அத்துடன், முருகேசனின் 3 பெண் பிள்ளைகளும் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளதால், அந்த 3 பெண் பிள்ளைகளும் வீட்டில் இருந்து வருகின்றனர்.

மேலும், அந்த 3 பெண் பிள்ளைகளும் தந்தைக்கு உதவியாகத் தந்தை உடன் காய்கறி கடையில் உதவி செய்து வந்தனர். தந்தை வெளியே செல்லும் நேரங்களில் எல்லாம், கடையில் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டு வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 22 ஆம் தேதி முருகேசனின் 2 வது மகளான 17 வயது சிறுமியை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த முருகேசன் - சினேகா தம்பதியினர், அந்த பகுதி முழுவதும் மகளைத் தேடி அலைந்துள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியைத் தேடி வந்தனர். 

இதனையடுத்து, கடந்த 25 ஆம் தேதி அன்று, அந்த சிறுமி, அழுதுகொண்டே கழுத்தில் தாலியுடன் வீடு திரும்பி உள்ளார். 

மகளைப் பார்த்துப் பதறிப்போன அவரது பெற்றோர்கள், சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது அழுதுகொண்டே பேச ஆரம்பித்த சிறுமி, “22 ஆம் தேதி பள்ளப்பட்டியைச் சேர்ந்த மயில்சாமியின் மகன் 24 வயதான பசுபதி ராஜா, கடையிலிருந்து வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறி அவனுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அவனது வீட்டிற்குக் கொண்டு போய் என்னை அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக என் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு 3 நாட்களாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து கடும் டார்ச்சர் செய்தான்” என்று கூறி கதறி அழுதுள்ளார்.

மேலும், “3 நாட்கள் வெறித் தீர பலாத்காரம் செய்து விட்டு, சாதி பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி நீயாக ஓடி விடு என்று, என்னை மிரட்டி அடித்துக் கொடுமைப்படுத்திவிட்டு மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் என்னை இறக்கிவிட்டுச் அவன் ஓடிவிட்டான்” என்று கூறி சிறுமி அழுது கதறி உள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், “பசுபதி ராஜா விவசாயம் செய்து வரும் நிலையில், தனது விவசாய நிலத்தில் விளையும் பொருள்களைத் தினமும் கொடைரோடு சந்தைக்குக் கொண்டுவருவதும் வழக்கம்‌‌. அப்போது, காய்கறிக் கடையில் இருந்த சிறுமியிடம் பேசி பழக்கமாகி உள்ளார். 

அத்துடன், சம்பவத்தன்று சிறுமியை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறிவிட்டு சொந்த ஊரான பள்ளப்பட்டி ஆறுமுகநகருக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக வீட்டில் அடைத்துவைத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தாலியை கட்டிவிட்டு சிறுமியைப் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது” தெரியவந்தது.

அதன்படி, போலீசார் பசுபதி ராஜாவின் சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, மறைந்து இருந்த பசுபதி ராஜாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும், அவர் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.