புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். 

சமீப காலமாக தமிழக போலீசார் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். சட்டத்தை காக்க வேண்டிய போலீசாரே, சட்டத்தை மீறி செயல்படுவதும் அதனால், புதிய புதிய சர்ச்சைகள் வெடிப்பதும் தமிழ் நாட்டில் வாடிக்கையாக நடைபெற்றக்கொண்டு இருக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது திண்டுக்கல் மாவட்டத்திலும் நடந்து உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ரேவதியும், அவரது குடும்பத்தினரும், அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர்.

அப்போது, ரேவதி குடும்பத்திற்கும் அவரது உறவினர் ஒருவரின் குடும்பத்திற்கும் இடையே பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனை எழுந்து உள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை எழுந்துள்ளது. பின்னர், அந்த பிரச்சனை தகராறில் முடிந்து கை கலப்பும் நடந்துள்ளது. 

இந்த சண்டையில் ரேவதி குடும்பத்தினர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் சம்மந்தப்பட்ட ரேவதி புகார் அளிக்கச் சென்றார்.

ஆனால், காவல் நிலையத்தில் ரேவதியிடமிருந்து போலீசார் எந்த புகாரையும் வாங்காமல், விசாரணை எதுவும் நடத்தாமலும் போலீசார் அலைக்கழித்து உள்ளதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக, அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், “இரவு நேரத்தில் உன் வீட்டிற்கு நான் வந்து உதவி செய்கிறேன். அதே நேரத்தில் நீயும் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று டபுள் மீனிங்கில் பேசியதாகவும், கூறப்படுகிறது.

மேலும், அடிக்கடி போன் செய்யும் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், “தொடர்ந்து தரக்கறைவாகவும், டபுள் மீனிங் அர்த்தத்தில் பேசுயும், பதிலுக்கு என்னையும் பேச சொல்லி தொந்தரவு செய்து வருவதாகவும், இதனால், எனக்கு பயம் அதிகரித்து உள்ளது. அவரிடமிருந்து என்னை காப்பற்றுங்கள்” என்றும், ரேவதி குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், “காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் உடன், அங்கு பணியில் இருந்த மற்ற போலீசாரும், இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாகவம்” ரேவதி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட காவல் நிலையத்தில் பணியில் இருந்த மற்ற போலீசார் மீதும், பாதிக்கப்பட்ட ரேவதி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

இதனிடையே, பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய போலீசாரே, புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் புகாரை வாங்காமலும், விசாரணை நடத்தாமலும் டபுள் மீனிங் அர்த்தத்தில் பேசி உள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.