ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கமிஷன் வாங்கியதாக வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொந்தளித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை பகுதியில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்கு மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சென்னையில் நேரில் சந்தித்து பேசிய அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாவது நாளாக மழையால் பாதித்த இடங்களை இன்றும் பார்வையிட்டார். 

e1

இன்று யானைக்கவுனி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மின்ட், எம்.ஜி.ஆர்.நகர், முல்லை நகர், மூலக்கடை மற்றும் வில்லிவாக்கம் பாபா நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை பார்வையிட்ட பின் பொதுமக்களுக்கு போர்வை, வேட்டி சட்டை, பிரெட், உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் பல பகுதியில் வெள்ளம் வடியவில்லை என்றும், சென்னை மாநகரே வெள்ளகாடாக மாறிவிட்டது என்றும் கூறினார்.

கடந்த மூன்று நாட்களாக நீர் வடியாத காரணத்தால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிடவில்லை என்ற மக்கள் புகார் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியை செய்துக் கொடுத்தது அதிமுக அரசு என்றும், அதிமுக ஆட்சியில் தான் பக்கிங்காம் கல்வாய் வரையிலான எண்ணூர் பகுதியில் இருந்த அடைப்பை நவீன இயந்திரம் மூலம் அகற்றியதால் தான், தற்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்காமல்  இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கமிஷன் வாங்கியதாக வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் கமிஷன் வாங்கியதை குறைகூறுபவர்கள் பார்த்தார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு இடங்களில் வடிகால்கள் அமைத்ததன் காரணத்தால், இன்று இந்த கனமழையிலும் பல்வேறு இடங்கள் நீர் தேங்காத சூழல் உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே தூர்வாரி இருக்க வேண்டும், ஆனால் தி.மு.க. அரசு அதில் கவனம் செலுத்தவில்லை என்றார். 

மக்கள் குறைகளை தான் தெரிவிக்கிறோம் என்றும், எதையும் இட்டுக்கட்டி சொல்லவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் நோக்கத்தோடு ஆய்வு நடத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தார். 

e2

தற்போது மூத்த ஐ.எ.ஏஸ். அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது காலம் தாழ்ந்த நடிவடிக்கை என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், தற்போது பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

முல்லை பெரியாறு பிரச்சனை வாழ்வாதர, ஜீவாதார பிரச்சனை என்றும், முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்த தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் 2015-க்கு பிறகு தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்ற உயர்நீதிமன்ற அதிருப்திக்கு தி.மு.க. அரசு பதில் சொல்ல வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.