ஃபேஸ்புக் மூலம் பெண்ணிடம் ஜோதிடர் என அறிமுகமான நபர், வீட்டிற்கு வந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள அதியமான் நகரைச் சேர்ந்த அறிவழகன், அவரது மனைவி 44 வயதான புவனேஸ்வரி, தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்த தம்பதியினர் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். அதே நேரத்தில், அறிவழகனின் மனைவி 44 வயதான புவனேஸ்வரி, அவ்வப்போது ஃபேஸ்புக் பக்கம் சென்று, பொழுதைக் கழித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில் தான், தனது மகளுக்குத் தோஷங்கள் இருப்பதாகவும், அவற்றைப் போக்க வேண்டும் என்றும், அது தொடர்பாக அவர் பலரிடமும் 
விசாரித்துக்கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.

அந்த நேரம் பார்த்து, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார். முன்பின் தெரியாத, முகம் அறியாத அந்த நபரிடம், “தன் மகளுக்குத் தோஷங்கள் நீக்கித் தருவது” குறித்து புவனேஸ்வரி பேசியிருக்கிறார்.

இதற்குப் பதில் அளித்த ஃபேஸ்புக் நண்பன், “இந்த பரிகாரங்களை எல்லாம் நானே செய்வேன்” என்று, கூறிவிட்டு, அந்த பெண்ணின் தொலைப்பேசி எண் மற்றும், அந்த பெண்ணின் வீட்டு முகவரி ஆகியவற்றை அந்த பெண்ணிடம் இருந்து வாங்கி உள்ளார்.

அதன் படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு, புவனேஸ்வரியின் வீட்டிற்குச் சென்ற அந்த ஃபேஸ்புக் போலி மந்திரவாதி, பூஜைகள் செய்து தந்திரமாக வீட்டில் இருந்த 6 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பணத்தை பறிகொடுத்த அந்த பெண் ரொம்பவும் வருத்தப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பணத்தை ஏமாற்றிப் பெற்றுச் சென்ற அந்த ஃபேஸ்புக் போலி ஆசாமி, மீண்டும் புவனேஸ்வரியின் வீட்டிற்கு வந்து உள்ளார். 

அப்போது, வீட்டில் அவரது கணவர் இல்லாமல், அந்த பெண் மட்டும் தனியாக இருந்து உள்ளார்.

அப்போது, இது தான் சமயம் என்று பார்த்த அந்த ஃபேஸ்புக் ஆசாமி, வீட்டில் தனியாக இருந்த புவனேஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார் என்று, கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி, சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து உள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து, தாக்கி உள்ளனர். அதன் பிறகு, அங்குள்ள அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட பெண்ணான புவனேஸ்வரி, அந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், அதியமான் கோட்டை 
காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், பிடிபட்ட அந்த நபர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரோடு பகுதியைச் சேர்ந்த 42 வயதான சத்தியமூர்த்தி என்கிற சங்கர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர், அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், “இது போன்று இன்னும் எத்தனை பேரின் வீட்டில் சென்று, அத்துமீறி மோசடியில் ஈடுபட்டார்?” என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.