சாதி வெறி : கையால் மலம் அள்ள வைத்து தலித் சிறுவன் கொடுமை!
By Madhalai Aron | Galatta | Jul 18, 2020, 03:46 pm
இந்தியாவில் சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையுடன் பழக வேண்டும் என்று பலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், பல இடங்களில், சாதிவெறி, இன வெறி, சம்பவங்களும், மதம் ரீதியான பலர் தாக்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகவே இருக்கிறது, சில இடங்களில் சாதி ரீதியான தாக்குதல், மத ரீதியான தாக்குதல்கள் உயிரிழப்பு வரை கொண்டு சென்றுவிடுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தான் இது போன்ற தாக்குதல் மிக அதிகம் நடக்கும். ஆனால் தற்போது சில வருடங்களாக, தமிழகத்திலும் சில இடங்களில் இதுபோன்ற சாதி, மத ரீதியான தாக்குதல்கள் நடந்து வருகிறது.
அந்த வகையில், பென்னாகரம் அருகேயுள்ள கிராமத்தில், தலித் சிறுவனை கையால் மலம் அள்ள வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், உள்ள பென்னாகரம் அருகே கோடானம்பட்டி என்ற கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். அவரின் மகன் அறிவரசன். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
அறிவரசன் இரண்டு நாட்களுக்கு முன், கடந்த 15-ம் தேதி இயற்கை உபாதைக்காக, அருகே இருந்த விவசாய நிலத்தில் உள்ள முட்புதருக்குள் சென்றுள்ளார். இதைப் பார்த்த அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர், சிறுவனின் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், அறிவரசனை கையால் மலத்தை அள்ள வைத்து வேறு இடத்தில் போடுமாறும் சொல்லியுள்ளார். இதனைச் செய்யத் தயங்கிய மாணவனை மூங்கில் கம்பால் அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மாணவன் அடி பொறுக்காமல் இரண்டு கையால் மலத்தை அள்ளி எடுத்து, அருகில் உள்ள ஏரியில் வீசி உள்ளார்.
இதனால் மனம் உடைந்து போன சிறுவன், தன் பெற்றோரிடம் நடந்ததைக் கூறவே, மாணவனின் பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பென்னாகரம் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி மேகலாவிடம் புகார் மனு கொடுத்தனர். ஆனால் காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பெற்றோர் வலியுறுத்தியதால் காவல்துறையினர் ராஜசேகர் மீது எஸ்,சி., எஸ்டிக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் புகாரில் கொடுத்தபடி வழக்குப் பதியப்படவில்லை எனச் சிறுவனின் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், மாணவனின் பெற்றோர் தன்னை தாக்கியதாக, சம்மந்தப்பட்ட ராஜசேகரும் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இதையடுத்து டி.எஸ்.பி மேகலா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பெரியார், இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பெ. மதலை ஆரோன்