1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தொடங்கிய நிலையில், மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டன. இதனையடுத்து, கொரோனா
 தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிஜலையில், பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பிய நிலையில் தான், “ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்” என்று, கடந்த மாதம் தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

அத்துடன், ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், பெரும்பாலன ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த வணக்கம் உள்ளனர்.

இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்த வண்ணம் இருந்ததால்,

இந்த நிலையில் தான், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், “பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும்” நிபுணர்கள் முன் வைத்தனர். 

அத்துடன், “இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும்” அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இப்படியாக, அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டுத் தெரிந்துகொண்ட முதலமைச்சர், அதன் அடிப்படையில் “வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக” அறிவித்துள்ளார். 

இதனால், பள்ளி கல்வி துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. 

மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16 ஆம்  தேதியில் இருந்து செயல்பட  அனுமதிக்கப்படுகிறது.

அதே போல், “தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும், அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9 ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், இதனை களையும் விதமாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. 

அதன் படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு வகை பயிற்சிக்கான கையேடுகள் மூலம் பயிற்சி அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன் படி, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை தயாரித்தல், எழுத்துகள் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. 

6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடிதம் எழுதுதல், வாசித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.

9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம்வ குப்பு ஆகிய மாணவர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. 

இப்படியாக, அனைத்து வகுப்புகளுக்கும் தனித் தனியாக கையேடு தயாரித்து ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றன. 

இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.