உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற முதலமைச்சர்,  முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, இன்று முதல் முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.

அப்போது, அந்த பகுதியில் வயல்வெளியில் நாற்று நட்ட பெண்களிடம் முதலமைச்சர் தனது காரை நிறுத்தி நலம் விசாரித்தார். அப்போது, அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். 

இதனையடுத்து அவர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். அதன்படி, பாப்பாபட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம், கிராம சபைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, கிராம சபை கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகள், தேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பின்னர், கிராம சபை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கிராமம் தான் இந்தியா என்று கூறியவர் மகாத்மா காந்தி” என்று, குறிப்பிட்டார். 

“காந்தியடிகளின் மனதை மாற்றிய பெருமைக்குரியது மதுரை என்றும், மதுரை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத சூழல் இருந்தது என்றும், கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்தோம்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“கடந்த 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நான், உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சி மேற்கொண்டேன் என்றும், 2006 ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுத்தார்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட 4 கிராமங்களில் தேர்தல் வென்றவர்களைச் சென்னைக்கு அழைத்து கலைஞர் பாராட்டினார்” என்றும், பழைய நினைவுகளை அவர் நினைவு கூர்ந்தார். 

மேலும், “பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்தியதற்காகச் சமத்துவ பெரியார் என்ற பட்டம் கலைஞருக்கு வழங்கப்பட்டது என்றும், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராம மக்களை சந்தித்தது மகிழிச்சி அளிக்கிறது” என்றும், அவர் தெரிவித்தார். 

“திமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும், திமுக தேர்தல் நேரத்தில் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டு உள்ளன” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வாரந்தோறும் நான் கேட்டறிவேன்” என்றும், அவர் கூறினார்.

“பாப்பாபட்டியில் 23.5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும் என்றும், பாப்பாபட்டியில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் மயானத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், நியாயவிலைக்கடை, கதிர் அறுக்கும் களம், மேல்நிலைத் தொட்டி உள்ளிட்ட வசதிகளும் உடனடியாக செய்யப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்தார். 

குறிப்பாக, “ஒற்றுமை இல்லாத ஊரில் சமத்துவம் வளராது; கடைக்கோடி மனிதனின் குரலையும் கேட்பேன், தமிழ்நாட்டில் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்கப் பாடுபடுவேன்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.

அதே போல், “கிராம சபை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியே இலக்கு என்றும், எனது எனது ஆட்சியல்ல, நமது ஆட்சி” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.