காதலனே காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயதான சரஸ்வதி. இவர் செவிலி படிப்பு படித்துக் கொண்டிந்தார். ஏப்ரல் 2ம் தேதி அதிகாலையில், வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை அருகே முள்புதரில் சடலமாகக் கிடந்தார். இதனையடுத்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். உடற்கூறாய்வில், சரஸ்வதியின் கழுத்து நெரிக்கப்பட்டது தெரியவந்தது. 


இதன்பிறகு போலீசார் விசாரணையில் சரஸ்வதியின் காதலன் 21 வயதான ரங்கசாமி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. ரங்கசாமியின் செல்போன் சிக்னல் அடிப்படையில், ஆந்திரமாநில எல்லையில்  அவரது நண்பன் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரைப் போலீசார் பிடித்தது தீவிர விசாரணை நடத்தினர்.  


சரஸ்வதி பண்ருட்டியில் உள்ள தனியார் செவிலியர் பயற்சி பள்ளியில் செவிலி படிப்பு முடித்துள்ளார். இதன்பின், சென்னையில் தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராகப் பணியாற்றி வந்த தாயுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமியுடன் சரஸ்வதிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சரஸ்வதி வீட்டில் எதிர்ப்பு எழுந்ததுள்ளது. இதன்பின்பு, தாய்மாமன் மகனுக்கு சரஸ்வதியைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்து, மார்ச் மாதம் நிச்சயதார்த்தமும் செய்து வைத்துள்ளனர்.


இதனையறிந்த ரங்கசாமி, சரஸ்வதியை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், புகைப்படங்களை அழித்து விடும்படி சரஸ்வதி கெஞ்சியுள்ளார். 


இதன்பிறகு, ஏப்ரல் 2ம் தேதி நள்ளிரவில் சரஸ்வதியை சந்திக்க சென்றுள்ளார் ரங்கசாமி. தனது நண்பர்கள் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் இருவரையும் வீட்டின் பின்புறத்தில் சற்று தொலைவில் மறைவாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.


வீட்டின் பின்புறத்தில் இருவரும் சந்தித்துப் பேசிய போது, சரஸ்வதி தன் பெற்றோர் முடிவுக்கு ஏற்கப் போவதாக தெரிவித்துள்ளார். அப்போது வாக்குவாதத்தின் உச்சத்தில் கோபமடைந்த ரங்கசாமி, சரஸ்வதியின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.


பின்னர் சரஸ்வதியின் சடலத்தைத் துாக்கிச் சென்று வீட்டின் கழிப்பறை அருகே போட்டு விட்டு நண்பர்களுடன் தப்பிச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரங்கசாமி மற்றும் நண்பர்களை காவல்துறை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இந்த சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் கூறியிருப்பது, ‘’ படுகொலையை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட வலியுறுத்துகிறேன். சரஸ்வதியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேவியனந்தல் சரஸ்வதியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டுமென தமிழக அரசை விசிக சார்பில் வலியுறுத்துகிறேன். “ என தெரிவித்துள்ளார்.