தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி - கல்லூரிகளைத் திறக்க தடை மேலும் தொடர்வதாகவும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2 வது அலையின் வேகம் சற்று குறைந்து வருகிறது.

இதனால், தமிழ் நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 12 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. 

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நிலையைக் கண்காணித்துத் தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தின் காரணமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 12 ஆம் தேதி முதல், வருகின்ற 19 ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 12 ஆம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், 19 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது” என்று, அறிவித்து உள்ளது.

அத்துடன், இந்த இடைப்பட்ட ஒரு வார காலத்தில் திரையரங்குகள், மதுக் கூடங்கள், நீச்சல் குளங்கள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

- திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

- இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரி, நடைபாதைக் கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- மத்திய - மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

- குறிப்பாக, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

- ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12 ஆம் தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அறிவிக்கப்பட்டு உள்ளது.