தீராத கள்ளக் காதல் ஆசைக்குத் தடையாக இருந்த கணவனை ஆள் வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் வில்லியநல்லூர் பகுதியில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான காலி இடத்தில் அடையாளம் தெரியாத சடலம் புதைக்கப்பட்டு இருப்பதாகக் கிராம நிர்வாக அலுவலர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்தப் புகார் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று  கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவ இடத்திலேயே தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், இறந்து போனவர் அங்குள்ள சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் மகன் 38 வயதான ஆசை என்பது தெரிய வந்தது.

மேலும், கொலை செய்யப்பட்ட ஆசையின் மனைவி தீபா, தனது கணவரை சில நாட்களாகக் காணவில்லை என்று, அங்குள்ள சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி புகார் அளித்திருந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கொலையான ஆசையின் மனைவி தீபா மீது, போலீசாருக்கு சற்று சந்தேகம் வந்துள்ளது. 

இதனால், தீபாவை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தி உள்ளனர். போலீசார் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், “கணவனின் நண்பன் ஐயப்பன் என்பவருடன் கடந்த ஒரு வருடமாகக் கள்ளக் காதல் உறவு வைத்திருந்தது” தெரிய வந்தது. 

இந்த விசயம் எப்படியோ, கணவன் ஆசைக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், கள்ளக் காதலன் உடன், அவர் தொடர்ச்சியாக உல்லாசமான வாழ்க்கை வாழ முடியவில்லை. அதற்குத் தடையாக இருந்த கணவனை கொலை செய்தால், நாம் கள்ளக் காதலன் உடன் ஆனந்தமாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்த மனைவி தீபா, ஐப்பனுடன் சேர்ந்து கொலைக்கான திட்டம் போட்டு உள்ளார். இதில், ஐயப்பனின் நண்பர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

அதன் படி, கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி, அங்குள்ள சாத்தமங்கலம் கிராமத்திற்கு ஆசையை அழைத்துச் சென்று அவர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது, மது போதை உச்சத்தில் இருந்த ஆசையை, ஐயப்பனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாகக் குத்தி கொலை செய்து உள்ளனர். அதன் பிறகு, அவரது உடலைப் புதைப்பதற்காக காரில் ஏற்றி, புதுச்சத்திரம் அருகே உள்ள தனியார் அனல்மின் நிலையத்திற்குச் சொந்தமான இடத்தில் புதைத்து உள்ளனர். புதைத்த இடத்தை யாரும் கண்டறியாமல் இருக்க, நர்சரி புல்களை வாங்கி புதைத்த இடத்தின் மீது பதித்து உள்ளதும்” தெரிய வந்தது.

இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட ஆசையின் மனைவி தீபா, கள்ளக் காதலன் ஐயப்பன், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற அராத்து, வண்டிக்கல் என்கிற கார்த்தி, மொட்டையன் என்ற அருண், 17 வயது சிறுவன் ஒருவன் என அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.