கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகேயுள்ள வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன். கடந்த அக்டோபர் 28-ம் தேதி திருட்டு வழக்குக்கான விசாரணை என்று செல்வமுருகனை அழைத்துச் சென்ற நெய்வேலி போலீசார், அவரைக் கைது செய்து விருத்தாச்சலம் சிறையில் அப்போது அடைத்தனர்.

அதன்பின்னர் செப்டம்பர் 2-ந் தேதி செல்வமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் சிறைக் காவலர்கள். அங்கு சிகிச்சை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மீண்டும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து செல்வமுருகன் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கபட்டது. 
 
இதனனத்தொடர்ந்து போலீசார் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் புகார் தெரிவித்தனா். இதுதொடர்பாக செல்வமுருகனின் மனைவி பிரேமா, மற்றும் அவரின் உறவினா்கள், 50-க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து திடீா் மறியலில் அச்சமயத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த பண்ருட்டி வட்டாட்சியா் ஆா்.பிரகாஷ், டிஎஸ்பி பாபு பிரசாத், காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் மலா்விழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி சூழலை சரிசெய்தார். தொடர்ந்து செல்வமுருகன் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினா்கள் வலியுறுத்தியதற்கும் செவிசாய்த்தார்.

உறவினர்களின் தொடர் குரலால், செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது. கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதத்தின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை பிரிவுக்கு, கடந்த நவம்பர் 7 ம் தேதி, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது

செல்வமுருகனின் மனைவி பிரேமா தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் வலியுறுத்தியதால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட வழக்கில் சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆதாரத்துடன் பரபரப்பு குற்றச்சாட்டை காவல்துறை மேல் வைத்திருக்கிறார். ஆதாரமாக, முக்கியமான சில வீடியோ காட்சிகளை வெளியிட்டிருக்கிறார் வேல்முருகன். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

``சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.  ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்ததற்கான ஆதார வீடியோவை வெளியிட்டுள்ளேன்.

செல்வமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு முதல் நாளே நகை மீட்கப்பட்டுள்ளது. செல்வமுருகன் முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வந்தவர் செல்வமுருகன் முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி செய்ததற்கான ஆதாரங்கள் என சில ஆவணங்கள் வெளியிட்டுள்ளேன். முந்திரி ஏற்றுமதி இறக்குமதி செய்த செல்வமுருகன் மீது நகை பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். செல்வமுருகனை போலீசார் தாக்கியதற்கு நேரடி சாட்சிகள் இருக்கின்றனர்.

அக்டோபர் 29-ந்தேதி போலீசாருடன் செல்வமுருகன் இருந்ததற்கான ஆதார வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. வளர்ந்து வந்த தொழில் அதிபர் ஒருவரை வழிப்பறி திருடனாக சித்தரித்துள்ளனர். புகாருக்கு உள்ளான காவல் ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்தது மட்டும் போதாது. விருத்தாசலம் சிறையில் உயிரிழந்த செல்வமுருகன் மரணத்தில் மர்மம் உள்ளது"

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வேல்முருகன் வெளியிட்டுள்ள ஆதாரங்களை பெற்று அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர், கடந்த நவம்பர் 12 ம் தேதியே, வேல்முருகன் இந்த வழக்கு தொடர்பாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அவர் அப்போது கூறும்போது, நெய்வேலி காவல்துறையினர் அவரை அடித்துச் சித்ரவதை செய்ததால்தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாகவும், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், ஆளுங்கட்சி ஒப்பந்ததாரருக்கும் செல்வமுருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதே அவரது மரணத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

அன்று (நவம்பர் 12) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேல்முருகன், `ஆளுங்கட்சி ஒப்பந்ததாரர் மீது புகார் அளிக்கச் சென்றபோது காவல் ஆய்வாளர் ஆறுமுகத்திற்கும் செல்வமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சி ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர், செல்வமுருகனின் மீது பொய்யான திருட்டு வழக்கு பதிந்து அடித்து துன்புறுத்தினர்' என குற்றம்சாட்டினார்.

இவற்றின் காரணமாக செல்வமுருகனின் மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதாகத் தெரிவித்த வேல்முருகன், குடும்பத்தினர் ஒப்புதல் இல்லாமல் செல்வமுருகனின் உடலை அவசர கதியில் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய காரணம் என்ன என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை இன்னும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். மரணத்தில் உள்ள மர்மத்தை தமிழக காவல்துறை களைய வேண்டும் என வலியுறுத்திய அவர், அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் செல்வமுருகனின் உடலுடன் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கையும் விடுத்தார் அவர்.