கொரோனா குறைந்து வருவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை அதிகமான நிலையில், கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடித்துக்கொண்டே வருகின்றன. 

தமிழகத்தில், கடந்த மே மாதம் தொடங்கி தற்போது வரை 7 வார காலம் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

7 வது முறையாக பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு, வரும் 5 ஆம் தேதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.  

அத்துடன், கொரோனா தொற்றின் அடிப்படையில் தமிழகத்தில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரித்து வெவ்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவைத் தமிழக அரசு தற்போது அமல்படுத்தி வருகிறது.

அதன் படி, 3 ஆம் வகை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகள் தவிர, மற்ற பணிகளைச் செய்யும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இவை அனைத்தும் கடந்த திங்கள் முதல் பழைய நடைமுறையில் வழக்கம்போல் திறக்கப்பட்டு உள்ளன.

அதே போல், 2 ஆம் வகையில் உள்ள அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில்  தற்போது கூடுதலான தளர்வுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆனால், முதல் வகையில் இடம் பெற்றுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு மிகவும் குறைந்த அளவிலான தளர்வுகளே அறிவிக்கப்பட்டு உள்ளன.

இப்படியாக, தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில், கடந்த வாரம் வரை 3 வகையாகப் பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் சற்று குறையத் தொடங்கி உள்ளன. 

குறிப்பாக, கொரோனா தொற்று அதிகம் இருந்த கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தற்போது குறையத் தொடங்கி உள்ளன.

இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்து உள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்று மாநிலம் முழுக்க ஒரே மாதிரியான பரிந்துரைகள் அமல்படுத்தப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இதனால், வரும் 5 ஆம் தேதி காலை முதல் இன்னும் சற்று கூடாதலான தளர்வுகளுடன் தமிழகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.