தமிழகத்தில் மீண்டும் வேகமெடுத்துள்ள கொரொனா வைரஸ்க்கு நேற்று ஒரே நாளில் 867 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா என்றும் பெருந் தொற்று வைரஸ், தமிழகத்துக்குள் உட்புகுந்து கடந்த ஒரு ஆண்டை தாண்டி விட்ட நிலையிலும் கூட, அதன் வேகம் குறையாமல் மீண்டும் தற்போது வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

கொரொனா வைரசுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இந்தியா உட்பட உலக நாடுகள் யாவும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால், பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதில், பெரும்பாலான மக்கள் வருமானமின்றி பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பாதிக்கு ஆளானார்கள். 

அதன் பிறகு, கொரோனா வைரஸ் தொற்று சற்று குறையத் தொடங்கியதும், ஊரடங்கும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வந்தன. அத்துடன், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைவாகக் காணப்பட்டு வந்தன. இதனால், பொது மக்களுக்கும் தங்களது இயல்பு வாழ்க்கையை மெல்ல மெல்லத் திரும்பினார்கள்.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த 12 நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் ஏற்படும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 500 க்கும் குறைவாகக் காணப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 12 நாட்களாக படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு சற்று உயர்ந்து, தற்போது 1.2 சதவீதமாக உயர்ந்து காணப்படுகிறது. 

முக்கியமாக, தமிழகத்தின் தலைநகர் சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் 2 சதவீதத்திற்கு சற்று மேலாகவே கொரோனா தொற்று பரவத் தொடங்கி இருக்கிறது. 

இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர், திருப்பூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களில் 1 சதவீதத்திற்கு மேலாகவும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. 

இதனால், நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது மீண்டும் 800 பேரை தாண்டி இருக்கிறது. கொரோனா 
பாதிப்பு அதிகரித்து வருவதால், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு கட்ட தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனால், வீட்டை விட்டு வெளியே பொது இடங்களுக்குச் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

அதே நேரத்தில், தமிழகத்தில் மீண்டும் வேகமெடுத்துள்ள கொரொனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 867 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

அதில், சென்னையில் புதிதாக 352 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 81 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 51 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதில், சென்னையில் 2,135 பேரும், செங்கல்பட்டில் 454 பேரும், கோவையில் 448 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் படி, தமிழ்நாட்டில் இது வரை 8 லட்சத்து 61 ஆயிரத்து 429 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. 

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 5 ஆயிரத்து 450 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து நேற்று மட்டும் 561 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள். இதனால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 43 ஆயிரத்து 423 ஆக அதிகரித்து உள்ளது.

சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 

இதனால், கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 556 என அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதனிடையே, உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.12 கோடியை உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.