காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண், அடுத்த 3 வது நாளே பெற்றோருடன் சென்றதால், மனமுடைந்த காதல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு, காதலர்கள் இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அத்துடன், இவர்களது திருமணத்திற்கும், இருவர் வீட்டின் பெற்றோர்களும் ஒற்றுக்கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 1 ஆம் தேதி காதலர்கள் இருவருக்கும் அவர்களது நண்பர்களே சேர்ந்து திருமணம் செய்த வைத்து உள்ளனர். இதனையடுத்து, பெண் வீட்டாரின் பெற்றோர், அங்குள்ள போத்தனூர் காவல் நிலையத்தில், “ என் மகளை கோவிந்தராஜ் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாக” புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், புதிதாகத் திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிகள் இருவரையும் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணிடம் போலீசார் தனித் தனியாகப் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, புதிதாகத் திருமணம் செய்துகொண்ட அந்த காதல் மனைவி, “ என் பெற்றோரிடமே நான் செல்கிறேன்” என்று கூறியதாகத் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, திருமணமான 3 வது நாளே, அந்த பெண்ணை போலீசார், அவரின் பெற்றோரிடமே அனுப்பி வைத்தனர். இதன் காணமாக, காதல் திருமணமான 3 வது நாளே, தன் காதல் மனைவி அவரின் பெற்றோரிடம் சென்றதால், காவல் நிலையத்தில் இருந்து கோவிந்தாரஜ், வெறும் கையுடன் வீடு திரும்பி உள்ளார்.

இதனால், கோவிந்தராஜின் பெற்றோர்கள் மகனைத் திட்டி உள்ளனர். இதனால், அவர் இன்னும் அதிக மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த நேரம் பார்த்து, கோவிந்தராஜ் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கடும் மன உளைச்சலில் இருந்த கோவிந்தராஜ், தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, உயிரிழந்த கோவிந்தாரஜின் உறவினர்கள், “கோவிந்தாராஜ் உயிரிழப்பிற்கு, பெண் வீட்டாரும், பஞ்சாயத்து பேசிய போலீசாருமே முக்கிய காரணம்” என்று போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார். விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண், அடுத்த 3 வது நாளே தனது பெற்றோருடன் சென்றதால், மனமுடைந்த காதல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.