சாதிய கொடுமை காரணமாக, கிராம உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரான் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சாதிய கொடுமை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் அடுத்து உள்ள ஒற்றர்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் கோபரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், தன்னுடைய சொத்து விவரங்களுக்கான ஆவண சரிபார்ப்புக்காக, அங்குள்ள ஒற்றர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்.

தன்னுடைய ஆவணங்களை அவர் விஏஓவிடம் வழங்கிய நிலையில், “நீங்கள் கொடுத்த ஆவணங்கள் சரியான முறையில் இல்லாததால் முறையான ஆவணங்களை கொண்டுவரும்படி” விஏஓ கலைச்செல்லி கூறியதாக தெரிகிறது.

இதனால், கோபிநாத் கோபம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கோபமடைந்த கோபிநாத், விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், அங்கிருந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த உதவியாளர் முத்துசாமி, அப்போது குறுக்கீட்டு தடுத்திருக்கிறார். இதனால், கிராம நிர்வாக உதவியாளரை கோபிநாத் மிரட்டியதுடன், “நீ ஊரில் இருக்க முடியாது என்றும், பொய் புகார் கூறி வேலையை காலி செய்துவிடுவேன்” என்றும், அவர் சாதிப்பெயரை குறிப்பிட்டு தகார வார்த்தைகளால் திட்டியதாகவும், கூறப்படுகிறது.

குறிப்பாக, தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு அவர் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில், கோபிநாத்தின் மிரட்டலால் பயந்துபோன கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி, அங்குள்ள மேசை மீது அமர்ந்திருந்த கோபிநாத் முன்பு தரையில் இருந்த அவர் காலில் விழுந்து, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு உள்ளார்.

இதனைக் ஏற்றுக்கொண்ட கோபிநாத், “நான் உன்னை மன்னித்து விட்டதாகவும், எனது மீதும் தவறு இருப்பதாகவும் கோபிநாத் பேசிய வீடியோ” தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

“இந்த சம்பவத்திற்கு அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்களில் நடக்கும் இது போன்ற சாதிய கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும், சமூக செயற்பாட்டாளர்கள் அடுத்தடுத்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அத்துடன், “ஒற்றர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த இந்த சாதிக் கொடுமை குறித்து, விஏஓ அலுவலகத்துக்கு ஆர்.டி.ஓ நேரில் சென்று விசாரிக்க வேண்டும்” என்று, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அதிரடியாக உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்ற நிலையில், “அரசு ஊழியர் ஒருவர் காலில் விழ வைத்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த” கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான், அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

மேலும், “காவல் துறை வழக்குப் பதிவு செய்து, தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கவும்” மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அன்னூர் காவல் நிலையத்திற்குச் சென்று விஏஓ கலைச்செல்வி மற்றும் முத்துசாமியிடன் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். அதே நேரத்தில், கோபிநாத்தை விசாரணைக்காக நேரில் போலீசார் அழைத்துள்ளனர்.