“ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால், ஆங்கிலத்தில் தான் மத்திய அரசு பதில் அனுப்ப வேண்டும், இந்தியில் அனுப்ப கூடாது” என்று, உயர்நீதிமன்றம் அதிரடி காட்டி உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றது முதல், இந்தி மொழியின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தமிழகத்தில் உட்புகுந்துகொண்டு, வருவதாகவும், தமிழகத்தின் பல மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி மொழியிலேயே தகவல் பரிமாற்றங்கள் நிகழ்வதாகவும், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதே நிலை, நாடாளுமன்றத்திலும் தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது, தமிழக ஊடகங்களில் பெரும் விவாத பொருளாக எழுந்தது.

இது குறித்து, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசுக்கும் எழுதும் கடிதங்களுக்கு அவரவர் மொழியிலேயே பதில் அளிக்க வேண்டும்” என்று, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாகத் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

இது தொடர்பாக, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “மத்திய ரிசர்வ் படையின் குரூப் - பி மற்றும் குரூப் - சி  பிரிவுகளைச் சார்ந்த 780 அகில இந்தியப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி அன்று நடைபெறுமென்று வெளியிடப்பட்டிருந்து. ஆனால், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட அதில் இடம் பெறவில்லை.

இது குறித்து நான் தமிழக உள்துறை அமைச்சகத்திற்கும், CRPF  பொது இயக்குனருக்கும் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அன்று கடிதம் எழுதியிருந்தேன்” என்று, குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதிக் குறைந்த பட்சம் ஒரு மையத்தை இவ்விரு பகுதிகளுக்கும் அறிவிக்குமாறு கடிதம் அனுப்பி இருந்தேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.

ஆனால், “நான் மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்திற்கு, மத்திய அரசானது இந்தி மொழியில் எனக்குப் பதில் அளித்ததாகவும், இது போன்று, தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கிற நடைமுறை தொடர்ந்து இருந்து வருகிறது” என்றும் குறிப்பிட்டு, அந்த பதிலை நகல் எடுத்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதன் படி, இன்றைய தினம் அந்த அமர்வு தீர்ப்பும் வழங்கியது. 

அந்த தீர்ப்பில், “தாய்மொழி என்பது மிகவும் முக்கியமானது” என்று, நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

“அடிப்படை கல்வியைத் தாய் மொழியில் வழங்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும், எனினும் எத்தகைய செய்தி, விளக்கம் ஆயினும் தாய்மொழியில் புரிந்துகொள்ளும் போது, முழுமை அடைய முடியும்” என்றும், நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மேலும், “இந்தியாவில் சில மொழிகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கிறது என்றும், சில மொழிகள் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கிறது என்றும், ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அத்துடன், “ஒரு மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்றும், நீதிபதிகள் கண்டிப்புடன் கூறியுள்ளனர். 

“இந்திய அலுவல் மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு இந்தி மொழியில் மத்திய அரசு பதில் அளித்து உள்ளது” என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

“விதி மீறும் எண்ணமில்லை என்று மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், இந்திய அலுவல் மொழி சட்டத்தை மத்திய அரசு அதன் அலுவலர்கள் முறையாகப் பின்பற்ற உத்தரவிடுகிறோம்” என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.