கொரோனா வைரசுக்கு சென்னையில் இன்று 24 பேரும், திருச்சியில் 2 பேரும், வேலூரில் 2 பேர் என மொத்தம் 28 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், கொரோனா பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 24 பேர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். 

அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த 9 பேர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தனர்.

அதேபோல், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர், சென்னை கேம்.எம்.சி. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் என இன்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். அத்துடன், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் என மொத்தம் 24 பேர் இன்று ஒரே நாளில் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இன்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த 40 வயதான பெண் என்பதும், மற்றொருவர் திருச்சி வாசன் நகரைச் சேர்ந்த முதியவர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதால், அம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட சத்துவாச்சாரியைச் சேர்ந்த 73 வயது முதியார் ஒருவரும், சங்கரன் பாளையத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் என இன்று 2 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 28 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அதே போல், திருச்சி கோட்டை மதுரம் தற்காலிக காய்கறி சந்தையில் வியாபாரிகள் 50 பேருக்கு இன்று கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் * பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,701 ஆக உயர்ந்துள்ளது.  

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 4,139 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்த்துறை அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தை முழுமையாக மூடுவது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

குறிப்பாக, உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன். எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொடைக்கானலில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 27 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முக்கியமாக, சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கோவையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.