தமிழகத்தில் நேற்று 29 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் தொற்று அதிவேகமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நேற்று ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 54 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16 ஆயிரத்து 884 ஆண்கள், 12 ஆயிரத்து 986 பெண்கள் என மொத்தம் 29 ஆயிரத்து 870 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதில் அதிகபட்சமாக சென்னையில் 7 ஆயிரத்து 38 பேரும், கோவையில் 3 ஆயிரத்து 653 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 250 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக சிவகங்கையில் 127 பேரும், பெரம்பலூரில் 128 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 21 பேர் உள்பட 12 வயதுக்குட்பட்ட ஆயிரத்து 75 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4 ஆயிரத்து 247 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 30 லட்சத்து 72 ஆயிரத்து 666 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 15 ஆயிரத்து 371 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 44 ஆயிரத்து 726 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 9 ஆயிரத்து 690 பேர் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 555 பேர் ஆக்சிஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், ஆயிரத்து 95 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 12 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 21 பேரும் என 33 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேரும், திருவள்ளூர், திருச்சியில் தலா 4 பேரும், கோவையில் இருவரும், செங்கல்பட்டு, திண்டுக்கல், காஞ்சீபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 13 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 145 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 21 ஆயிரத்து 684 பேர் மீண்டு ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 8 ஆயிரத்து 164 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 11 பேரும், கோவையில் ஆயிரத்து 383 பேரும் அடங்குவர். இதுவரையில் 28 லட்சத்து 48 ஆயிரத்து 163 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 358 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.