அக்டோபரில் உச்சம் அடையும் கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையாக மாற்றப் படுகிறது.

சென்னையில் முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மிகப் பெரிய அளவில் பரவி வருகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்பு சற்று குறைவு தான் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

சென்னையை தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாள் தோறும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அத்துடன், மதுரை, தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது. அந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, அந்த ஆய்வு அறிக்கையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தில் உச்சத்தைத் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 12 நாள் முழு ஊரடங்கு காரணமாகவும், மதுரை மற்றும் தேதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாகவும், கொரோனா வைரஸ் தொற்று உச்சம் அடைவது இன்னும் 2 வாரங்களுக்குத் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

அந்த குறிப்பிட்ட 12 நாட்களுக்குப் பிறகு, அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாகத் தமிழகத்தில் ஜூலை மாத இறுதிக்குள் சுமார் 2.75 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் இந்த மாத இறுதிக்குள் சுமார் 71 ஆயிரம் பேரும், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன், ஜூலை 15 ஆம் தேதி கால கட்டத்தில் சென்னையில் 1.5 லட்சம் பேருக்கும், தமிழகம் முழுவதும் சுமார் 2.76 லட்சம் பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவக் கூடும் என்றும், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் மற்றும் தொற்று நோய் துறை தலைவர் சீனிவாஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.

அதேபோல், சென்னையில் அக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தைத் தொடும் என்றும், மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைப்பதில் தமிழக அரசு தற்போது மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக சென்னையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையானது, முற்றிலும் கொரோனா நோயாளிகளுக்காக முழுமையாக ஒதுக்கப்படுகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், சுமார் 3 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா தொற்ற பரவல் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் முற்றிலும் தற்போது குறைந்து விட்டனர். சுமார் 250 க்கும் குறைவான புற நோயாளிகளே தற்போது அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதன் காரணமாக, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை முற்றிலும் கொரோனா மருத்துவமனையாக மாற்றும் அதிரடியான நடவடிக்கையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள அத்திப்பட்டுவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான குடியிருப்பை கொரோனா சிறப்பு மையமாக தற்போது தமிழக அரசு மாற்றி வருகிறது. 

இந்த குடியிருப்பில் சுமார் 5 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த மாதம் 10 ஆம் தேதிக்குள் இந்த சிறப்பு மையம் முற்றிலும் செயல் படத் தொடங்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இங்கு, கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளை 4 பிரிவுகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி தற்போது முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் சென்னை ராஜீவ் காந்தி போன்ற அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

காய்ச்சல் மட்டும் உள்ளவர்கள் கொரோனா ஹெல்த் சென்டர்களில் அனுமதிக்கப் பட உள்ளனர். கொரோனா வைரஸ் அறிகுறிகள் குறைவாக அல்லது தொற்று  இல்லாதவர்கள் கொரோனா கேர் சென்டர்களிலும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற நோயாளிகள் டாக்டர்களின் அறிவுரையின் படி, அவரவர் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளப் பரிந்துரைக்கப் படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.