சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பிரியங்கா தாக்கல் செய்த மனுவில், `என்னுடைய கணவருக்கு அறிகுறிகளே இல்லாத நிலையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  எங்களிடம் எங்கு சிகிச்சை பெறப் போகிறோம் என ஒப்புதல் கூட கேட்காமல் என்னுடைய கணவரை சிகிச்சைக்காக வலுக்கட்டாயமாக கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்றனர். அந்த கொரோனா சிகிச்சை மையத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. தனிமனித இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. என் கணவரை கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்ற பின் என் வீட்டை தகரம் வைத்து அடைத்தனர். அறிகுறிகள் இல்லாத, குறைவான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கொரோனா சிகிச்சை மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது என  தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'  என கோரியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா  ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு அவர்கள் வசிக்கும் பகுதியில்  தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்ன? எந்த விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது" என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த மனுவுக்கு, தமிழக அரசு மற்றும் சென்னை  மாநகராட்சி  பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா நோயாளி என சந்தேகிக்கப்பட்ட ஒருவரின் வீட்டில் தகரம் அடிக்கப்பட்டது, மிகப்பெரிய சர்ச்சையானது. பொதுவாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் மருத்துவமனைகளிலோ அல்லது கொரோனா கண்காணிப்பு முகாம்களிலோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர, எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் தொற்று கண்டறியப்படும் நபர்கள், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி இருப்பின் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவும் அனுமதியளிக்கப்படுகிறது.

இப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்பவர்களின் வீடு, தகரம் அல்லது மரக்கட்டையால் அடைக்கப்படுகிறது. இப்படியான நடவடிக்கையில் பல கொடுமைகளும், கொடூரங்களும் நடந்துவருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சென்னை மடிப்பாக்கம், பத்மாவதி நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாதபடி தகரத்தால் வீட்டின் வாசல் அடைக்கப்பட்டது. அந்தக் குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு நபருக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவை உருவானது. ஆனால், வெளியில் செல்வதற்கு வழியில்லாததால், அந்தப் பகுதி மாநகராட்சி அதிகாரிக்கு போனில் அழைத்துப் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்களிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில், அந்த நபர் தகரத்தின் அருகிலிருக்கும் சிறிய கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து, மருத்துவமனைக்குச் சென்று வந்திருக்கிறார். அதற்கு அடுத்த நாள் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து, `நீங்கள் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறிவிட்டீர்கள். இன்னொரு முறை இப்படிச் செய்தால் உங்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மெசேஜ் வந்திருக்கிறது.

உதவி கேட்டு அழைத்தபோது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, வெளியில் சென்று வந்த பிறகு `விதிகளை மீறிவிட்டீர்கள்’ என மெசேஜ் அனுப்புவது என்ன மாதிரியான அணுகுமுறை... நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதேபோல சென்னை குரோம்பேட்டை, புருஷோத்தமன் நகரில் பாதல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் வங்கி ஊழியர் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் 14 நாள்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பியதும், அந்த வீட்டைவிட்டு யாரும் வெளியே வர முடியாத வண்ணம் வீட்டின் வாசல் தகரத்தால் அடைக்கப்படுகிறது.

அந்த வீட்டில் வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள் என ஆறு பேர் வசிக்கிறார்கள். சுத்தமாக வெளியுலகத் தொடர்பில்லாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறிய பிறகு, உடனடியாக அடைக்கப்பட்ட தகரத்தை நீக்க உத்தரவிட்டிருக்கிறது நகராட்சி நிர்வாகம்.

மேலும் சென்னை அருகிலுள்ள பம்மல், அண்ணாநகர் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அவர் மருத்துவமனைக்குச் செல்கிறார். அதைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு முழுவதுமே தகரத்தால் யாரும் வெளியே வர முடியாத வண்ணம் அடைக்கப்படுகிறது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதில் கொடுமை என்னவென்றால், தொற்று உறுதி செய்யப்பட்டவரும் அங்கு இல்லை. அவர் வசித்த வீட்டில் அவரைத் தவிரவும் வேறு யாருமே இல்லை. பிறகு யாருக்காக இந்தத் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் தகர வேலி? என்ற பொது வெளியில் கேள்வி எழுந்தது. 

தற்போது உயர்நீதிமன்றமும் இதேபோன்றதொரு கேள்வியைத்தான் அரசிடம் முன்வைத்துள்ளது. அரசுதரப்பு இதற்கு என்ன விளக்கம் த்அரவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!