பள்ளி மாணவிக்குத் தாலி கட்டிய இளைஞனின் வீடியோ வைரலானதால், ஒரு ஆண்டுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் சீருடை அணிந்த படி பள்ளிக்கூடம் சென்ற குறிப்பிட்ட மாணவி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், அந்த மாணவி பள்ளியின் சீருடை அணிந்த படியே, தான் விரும்பும் இளைஞனைச் சந்திக்கச் சென்று உள்ளார்.

அப்போது, அந்த பள்ளி மாணவியிடம் ஆசை ஆசையாகப் பேசி, அந்த மாணவியின் மனதை மாற்றிய அந்த இளைஞன், அந்த மாணவிக்கு திடீரென்று தாலி கட்டி உள்ளார். இதனை, அந்த இளைஞனின் நண்பர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டனர்.

இதனையடுத்து, அந்த மாணவி எப்போதும் போல தனது வீட்டிற்கும், பள்ளிக்கும் சென்று வந்துகொண்டு இருந்துள்ளார். இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வருடம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கில் பகிரப்படு கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் அது பெரும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பொது மக்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். அத்துடன், இது தங்களது மகளாக இருக்குமோ என்று, பல பெற்றோரும் பீதியிரைடந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகம் வரை புகார்கள் அளிக்கப்பட்டன. 

இதனையடுத்து, ஊட்டியில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறையினர், குன்னூர் மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளி மாணவிக்குத் தாலி கட்டிய இளைஞர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அந்த இளைஞன் அங்குள்ள சட்டன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 23 வயதான கெளதம் என்பது தெரிய வந்தது.அவர், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தெரிய வந்தது. அத்துடன், வீடியோவில் இருக்கும் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவியையும் கண்டுபிடித்த போலீசார், அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து உள்ளனர்.

விசாரணைக்குப் பிறகு, பள்ளியில் படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தாலி கட்டிய குற்றத்திற்காக, அந்த இளைஞரைக் கைது செய்த போலீசார், குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

மேலும், சம்மந்தப்பட்ட மாணவியை ஊட்டியில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து, அந்த இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே, பள்ளி மாணவிக்குத் தாலி கட்டிய இளைஞனின் வீடியோ வைரலானதால், ஒரு ஆண்டுக்குப் பிறகு தற்போது அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.