அரை நிர்வாண உடம்பில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைவது போல் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர் ரெஹனா பாத்திமா மீது சிறுவர்களை ஆபாசப் படத்தில் நடிக்க வைக்கத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹனா பாத்திமா, பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

சமீபத்தில் பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போது, அந்த தீர்ப்பை அடுத்து கனக துர்கா, பிந்து என்ற 2 பெண்களும் கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குச் சென்று வந்தனர். இதனையடுத்து, கேரளாவைச் சேர்ந்த ரெஹனா பாத்திமாவும் சபரி மலை ஏற முயன்று, பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் பின் வாங்கினார். 

இதனைத் தொடர்ந்து, ரெஹனா பாத்திமா மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில், அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். பின்னர்,  பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரெஹனா பாத்திமாவை, பி.எஸ்.என்.எல் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. 

இந்த நிலையில், சமூக ஆர்வலர் ரெஹனா பாத்திமா மீண்டும் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.  

அதாவது, ரெஹானா பாத்திமா, ஜூன் 19 அன்று, தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு வீடியோ பதிவை, யூடியூப் வீடியோவில் பதிவேற்றம் செய்து, அதனைத் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து உள்ளார். 

குறிப்பாக, அந்த வீடியோவை “#BodyArtPolitics” என்ற ஹேஷ்டேக்குடன் “பாடி மற்றும் பாலிடிக்ஸ்” என்ற தலைப்பில், அவர் பகிர்ந்து இருந்தார். 

அந்த வீடியோவில், “அரை நிர்வாண நிலையில் ரெஹனா பாத்திமா இருக்கிறார். அப்போது, அவருடைய சிறு வயது மகனும், மகளும் தாயார் பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது போல்” அந்த வீடியோ படமாக்கப்பட்டு இருந்தது. 

அத்துடன், “தன்னுடைய அம்மாவின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள், பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால் தான் இந்த சமூகம் மாறும்” என்று, அவர் அதில் கருத்து தெரிவித்து இருந்தார். 

அதேபோல், “பாலியல் மற்றும் நிர்வாணம் தடை செய்யப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் உடல்களைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை, மீண்டும் வலியுறுத்தவே இந்த வீடியோ பதிவு எடுக்கப்பட்டது” என்றும், ரெஹனா பாத்திமா அதில் விளக்கம் அளித்திருந்தார்.

“ஆண் உடலுடன் ஒப்பிடும்போது, பெண்ணின் உடலும் அவளது நிர்வாணமும் 55 கிலோவுக்கு மேல் சதை, கால்கள் இருப்பதைக் கண்டு லெகிங்ஸ் தூண்டப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ள ரெஹனா பாத்திமா, “அதே நேரத்தில் தோற்றத்தில் ஆண் நின்றால் ஆபாசம் இல்லை என்றும், இது சமூகத்திற்கு தற்போது வழங்கப் பட்டு வரும் தவறான பாலியல் உணர்வு தான்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார். 

“அழகு பார்ப்பவரின் கண்ணில் இருப்பது போலவே, பார்ப்பவரின் பார்வையில் ஆபாசமும் உள்ளதாகவும்” அந்த வீடியோவில் ரெஹனா பாத்திமா கருத்து தெரிவித்துள்ளார். 

இப்படி சர்ச்சைக்குரிய காட்சிகள், அது படமாக்கப்பட்ட விதம், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் என்று அது பகிரப்பட்டதால், இந்த வீடியோ பேஸ்புக்கில் பெரும் வைரலானது.

இந்த வீடியோ பெரும் வைரலானதால், கேரளாவில் தற்போது மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக, சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளி வராத வகையில், ரெஹனா பாத்திமா மீது கேரளா திருவல்லா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

குறிப்பாக, ரெஹனா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.

ரெஹனா பாத்திமாவின் இந்த செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள மனநல மருத்துவர் டாக்டர் சி.ஜே. ஜான், “'ஒரு தாய் மற்றும் அவரது குழந்தைகள் சம்பந்தப்பட்ட கலை தொடர்புகளில் எந்த விதமான ஆபாசத்தையும் காணவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இது ஒரு தனிப்பட்ட நபரின் சம்பந்தமாக இருந்தால் பரவாயில்லை என்றும்; ஆனால், அதைப் படமாக்கி பொதுமக்கள் பார்க்கும் வகையில் பொது வெளியில் விடும்போது தான் பிரச்சினை ஏற்படுகிறது” என்றும் கூறியுள்ளார். 

“பெரியவர் ஒருவர் 2 சிறார்களை, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்திடாத பருவத்தில் இது போன்று செயல்பட வைப்பது குற்றத் தன்மை உடையதாக்கி விடுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனால், ரெஹனா பாத்திமாவின் இந்த சர்ச்சைக்குரிய செயல், கேரளாவில் பெரிய அளவில் விவாத பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.