தமிழகத்தில் பவாரியா கும்பல்.. வடமாநில கும்பலை தொடர்ந்து செல்போன் ஜாமர், வாக்கிடாக்கி உடன் கொலம்பியா கொள்ளை கும்பல் புகுந்து சேலத்தில் கொள்ளையில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

“தீரன்” படத்தில் வரும் பவாரியா கொள்ளை கும்பலின் செயல்தான் மிரட்டும் தோரணையில் இருக்கும். ஆனால், தமிழகத்தில் புதிது புதிதாக வரும் ஒவ்வொரு கொள்ளை கும்பலும் வித்தியாசம் வித்தியாசமாக யோசித்து கொள்ளையில் ஈடுபடுவது தான் வியப்பாகவும், பீதியாகவும் இருக்கிறது.

தற்போது, சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீபாஸ்யம் என்பவர் அதே பகுதியில் நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், 2.25 கிலோ தங்க நகைகள், 57 கேரட் வைரங்கள், 6 லட்ச ரூபாய் ரொக்க பணம், 400 அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை அப்படியே வாரி சுருட்டி கொள்ளையடித்துச் சென்றனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீபாஸ்யம், தன்வ வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். அதில், 2  இளைஞர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து வருவதும், பின்னர் கொள்ளையடித்துவிட்டு அவர்கள் இருவரும் திரும்பிச் செல்வதும் போன்ற காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து, இந்த சிசிடிவி காட்சிகளுடன் அங்குள்ள காவல் நிலையத்தில், ஸ்ரீபாஸ்யம் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 9 மாதங்களாகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

அதே நேரத்தில் ஸ்ரீபாஸ்யம் வீட்டில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் மற்றும், அங்கு கிடைத்த பொருட்களை வைத்துக் கடந்த ஆண்டுகளில் கொள்ளையில் ஈடுபட்ட 80 பழைய குற்றவாளிகளுடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால், அவர்கள் யாருடனும் அவர்களது கைரேகை ஒத்துப்போகவில்லை. இதனால், இந்த வழக்கில் எந்த முன்னேற்றத்தையும் காணாமல் போலீசார் கடும் குழப்பத்தில் உரைந்துபோனார்கள்.

மேலும், கடந்த மாதம் பெங்களூரு நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற பெண் உட்பட 3 கொலம்பியா கொள்ளையர்களைப் பெங்களூரு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரில் 31 வீடுகள், சேலத்தில் நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீபாஸ்யம் வீடு ஆகிய இடங்களில் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். 

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் கொள்ளையடித்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை போலீசார் செய்தியாளர்கள் முன்பு புகைப்படம் எடுத்தனர். இந்த செய்தி வெளியானைத்தைப் பார்த்த சேலம் நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீபாஸ்யம், “இந்த நகைகள் எல்லாம் எண்ணுடையவை” என்று, உள்ள சூரமங்கலம் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, சேலம் சூரமங்கலம் போலீசார் பெங்களூரு சென்றனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட அந்த கொள்ளை கும்பலிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலம்பியா கொள்ளையர்கள் குறித்துப் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அதாவது, “கொலம்பியா நாட்டில் இருந்து விமானத்தில் வந்து கொள்ளையில் ஈடுபட்டு விட்டு, பின்னர் மீண்டும் விமானத்தில் திரும்பிச் சென்று விடுவார்கள். 

குறிப்பாக, “இந்த கொலம்பியா கொள்ளை கும்பலான பூட்டிய வீடுகளை ஒரு இளம் பெண்ணை வைத்தே நோட்டமிட்டு, அந்த வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, கொள்ளையடித்துச் செல்வதும்” தெரிய வந்துள்ளது.

முக்கியமாக, “செல்போன் சிக்னல் காட்டிக் கொடுத்து விடும் என்ற காரணத்தால், செல்போன் ஜாமர், தகவல் தொடர்புக்கு வாக்கிடாக்கியை பயன்படுத்தி சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு ஹைடெக்காக திருடி வந்ததும்” தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் எந்த ஒரு எப்படிப்பட்ட கதவையும் எளிதாக உடைக்கும் அளவுக்கு இவர்களிடம் ஹைடெக்கான சாதனங்களும், கருவிகளும் வைத்துள்ளனர். இவர்கள் திருடும் வீடுகள் பெரும்பாலும் பங்களா போன்ற வீடுகள் மற்றும் நகைக்கடைகளைக் குறிவைத்துக் கொள்ளையடிப்பது இந்த கொலம்பியா கொள்ளை கும்பலான டார்க்கெட்டாக” இருந்துள்ளது.

இந்த கொலம்பியா கொள்ளை கும்பலில் மொத்தம் 5 பேர் உள்ள நிலையில், அவர்களில் 3 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்க வில்லை என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களுக்கு இந்த கொலம்பியா கொள்ளை கும்பலின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, உஷார் படுத்தப்பட்டு உள்ளன. இதனால், தமிழக மக்கள் மீண்டும் பீதியடைந்துள்ளனர்.

இதனிடையே, திண்டுக்கல்லில் கடப்பாரை திருடன் எனக் கூறப்படும் கொள்ளையர் ஒருவர் மருந்துக் கடையில் திருடிக்கொண்டிருக்கும் போதே, போலீசார் அவரை கையும் களவுமாகக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.