காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தங்க நகைகளை கழற்றி கொடுத்து விட்டு காதலனை கல்லூரி மாணவி கரம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கரவிளாகத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் சஜின் ( 25). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். 

சஜின் வேலை செய்த கடைக்கு கருங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் அபிஷா (21) என்பவர் கல்லூரிக்கு தேவையான பொருட்கள் வாங்க வருவது வழக்கம். 

அபிஷா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடையில் பொருட்கள் வாங்க வரும்போது அபிஷாவுக்கும், சஜினுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

love marriage

சஜினுக்கும், அபிஷாவுக்கும் இடையே இருந்த சாதாரண பழக்கம் நாட்கள் செல்லச்செல்ல காதலாக மாறியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் அபிஷாவின் பெற்றோருக்கு தெரியவர, அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அபிஷாவிடம் இருந்த செல்ஃபோனையும் அவரது பெற்றோர் வாங்கி வைத்துக் கொண்டனர். 

இதனால் காதலர் சஜினுடன் பேசமுடியாமல் கல்லூரி மாணவி அபிஷா தவியாய் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அபிஷாவின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். 

அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவசரமாக பக்கத்து வீட்டுக்கு சென்ற அபிஷா, அங்கிருந்தவரின் செல்ஃபோனை வாங்கி சஜினுக்கு பேசியுள்ளார். 

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், செல்ஃபோனை பிடுங்கி வைத்துக்கொண்டதால் தனது நிலைமையை சஜினுக்கு அபிஷா எடுத்து கூறியுள்ளார்.

மேலும் உடனடியாக தன்னை அழைத்து செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அபிஷா கூறியதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து சஜின் இருசக்கர வாகனத்தில் விரைந்து வந்து அபிஷாவை அழைத்து சென்றார். பின்னர் கரவிளாகம் பகுதியில் உள்ள கோவிலில் நண்பர்கள் உதவியுடன் அபிஷா-சஜின் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

love marriage

இதையடுத்து அபிஷா-சஜின் இருவரும் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு மாலையும், கழுத்துமாக வந்து தஞ்சமடைந்தனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு தருமாறும் அபிஷா-சஜின் இருவரும் கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், மணமக்கள் அபிஷா மற்றும் சஜினின்  பெற்றோரை வரவழைத்து பேசினார். 

அப்போது அபிஷாவின் பெற்றோர் படிப்பு முடிந்தப் பிறகு திருமணம் பற்றி பார்க்கலாம் என்று அபிஷாவிடம் கெஞ்சி பார்த்தார்கள். ஆனால் அபிஷா அதனை காதில் வாங்கிகொள்ளவில்லை. தனது காதல் கணவருடன் செல்வதிலேயே அபிஷா உறுதியாக இருந்துள்ளார்.

எவ்வளவோ பெற்றோர் கெஞ்சியும் அபிஷா பெற்றோருடன் வர சம்மதிக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் அபிஷா அணிந்திருக்கும் நகைகளை கழற்றித்தரும்படி அவரது பெற்றோர் கேட்டனர். 

தங்க நகைகளை விட காதல் கணவரே பெரிது என நினைத்த அபிஷா, தான் அணிந்திருந்த நகைகளை போலீசார் முன்னிலையில் பெற்றோரிடம் கழற்றி கொடுத்தார். 

இதையடுத்து சஜின்-அபிஷா இருவரும் திருமண வயதை எட்டி இருந்ததால், அபிஷாவை காதல் கணவருடன் காவலதுறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.