மாணவி மீது காதல் கொண்ட ஆசிரியர் ஒருவர், போலி திருமண சான்று தயாரித்து கல்லூரி மாணவிக்குப் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சதீஷ் குமார் என்பவர், விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இங்கு, இதே கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் 20 வயதான மாணவி ஒருவர் மீது, பேராசிரியர் சதீஷ் குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த உள் நோக்கத்தின் அடிப்படையிலேயே பேராசியரிர் சதீஷ் குமார், அந்த மாணவியிடம் பழகி வந்தார் என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், “என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று, சம்மந்தப்பட்ட மாணவியை அந்த கல்லூரி பேராசிரியர் தொல்லை கொடுத்து வந்தார். 

ஆனால், அந்த கல்லூரி பேராசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. இதனை, அந்த பேராசிரியரிடமே அந்த மாணவி சுட்டிக் காட்டி, நியாயம் கேட்டுள்ளார். ஆனாலும், அந்த ஆசிரியர் காதல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறார். இதனால், ஒரு கட்டத்தில் அந்த மாணவி, பேராசிரியர் சதீஷ் குமாரை தொடர்ந்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அந்த மாணவியின் குடும்பத்தினரிடம் கல்லூரி பேராசிரியர் சதீஷ் குமார், குடும்ப நண்பர் போல் பழகி வந்துள்ளார். அப்படியான தருணங்களில் அந்த மாணவியின் வீட்டிலிருந்த சான்றிதழ்களைத் திருடி, அதை வைத்து அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது போல ஒரு போலியான சான்றிதழையும் தயாரித்து, அதனை வைத்து அந்த மாணவியை அவர் மிரட்டத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக அந்த மாணவியின் பாட்டி, அவரது அத்தையின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அந்த போலியான திருமண சான்றிதழை அனுப்பி வைத்துவிட்டு, “நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம்” என்று, கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார். 

இதனால், அந்த மாணவியின் வீட்டில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தியாகராயர் துணை ஆணையரை அணுகி, தன்னுடைய பள்ளி சான்றிதழ்களை வைத்து போலி திருமண சான்றிதழ் தயாரித்து, அதனை தன்னுடைய பாட்டி, அத்தைக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி, தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், இல்லையென்றால், போலிச்சான்றிதழை சமூக வலைத்தளங்களில் பரப்பி, தனது வாழ்க்கையைச் சீரழித்து விடுவேன்” என்று, சதிஷ் மிரட்டி வருவதாகவும், புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர், மோசடியாக திருமண பதிவுச் சான்று தயாரித்து கல்லூரி மாணவியை மிரட்டியது உறுதியானது. 

இதனையடுத்து, உதவி பேராசிரியர் சதிஷ்குமார் மீது போலியாக ஆவணங்களைப் புனைதல், போலி ஆவணங்களின் மூலம் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அத்துடன், இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை அசோக் நகர் மகளிர் காவல் துறையினர் பேராசியரிர் சதீஷ் குமாரை அதிரடியாகக் கைது செய்து தீவிரமான விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.