கோவை அருகே 12 ஆம் வகுப்பு மாணவிக்கு திருமண ஆசை காட்டி, இளைஞர் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம் சோமனூர் அடுத்து உள்ள பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ரஞ்சித் குமார் என்ற இளைஞர், அந்த பகுதியில் கார் ஓட்டுநரான வேலை பார்த்து வருகிறார்.

அதேபோல், அங்குள்ள கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை, தினமும் பின் தொடர்ந்து சென்ற ரஞ்சித் குமார், அந்த சிறுமியிடம் காதல் வார்த்தைகள் பேசி, திருமண ஆசை வார்த்தைகள் கூறி, அந்த சிறுமியை கடத்திச் சென்றதாகத் தெரிகிறது. 

இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில், மகளை கடத்திச் சென்ற ரஞ்சித் குமார் மீது புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ரஞ்சித் குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், அவர் தலைமறைவாக இருந்த இடத்தை கண்டுபிடித்த போலீசார், அவரை சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு, ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றுக்கொண்ட நிலையில், போக்‌சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் பிறகு கோபிசெட்டிபாளையம் கிளைச் சிறையில் அடைத்தனர். 

மேலும், கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு, அங்கள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுமதித்து உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், கோவையில் இரவு நேரத்தில் வீட்டின் ஜன்னல் கதவுகளைத் திறந்து பார்க்கும் மர்ம மனிதனால் பொது மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கோவை இடையர்பாளையம் பகுதியில் மக்கள் எல்லாம் இரவு நன்றாக உறங்கிக்கொண்டு இருக்கும் போது, அந்த பகுதியில் சைக்கிளில் வலம் வரும் இளைஞர் ஒருவர், சைக்கிளை அந்த பகுதியில் ஓரமாக நிறுத்தி விட்டு, அந்தப் பகுதியில் இருக்கும் சுவர் மீது ஏறிக் குதித்து, அங்குள்ள வீடுகளில் ஜன்னல்களைத் திறந்து உள்ளே இருக்கும் படுக்கை அறையை நோட்டம் இடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அவர், “படுக்கை அறையில் படுத்து உறங்கும் தம்பதிகளைப் பார்க்கிறாரா? அல்லது அந்த படுக்கை அறையில் இருக்கும் பீரோ உள்ளிட்ட பொருட்களை நோட்டமிடுகிறாரா? என்று, அந்த பகுதி மக்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

இப்படி, சைக்கிளில் வலம் வரும் இளைஞர், அங்குள்ள வீடுகளில் ஜன்னல்களைத் திறந்து உள்ளே இருக்கும் படுக்கை அறையை நோட்டம் இடுவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், சத்தம் போட்டுக் கூச்சலிட்டு உள்ளனர். இதனைப் பார்த்து, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும், அங்குள்ள சிசிடிவியில் அப்படியே பதிவாகி இருந்தது. 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன் மூலம் அந்த மர்ம நபர் யார்? என்று, தீவிரமாக போலீசார் துடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.