உக்ரைனில் இருந்து நெல்லை திரும்பிய மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 9வது நாளாக நீடித்து வருகிறது.  இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். தூத்துக்குடியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைத்த அவர், கடந்த மழையின்போது வெள்ளம் பாதித்த பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் சென்றார்.  
  
இதனையடுத்து அப்போது உக்ரைனில் இருந்து நெல்லை திரும்பிய மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.  முதல்வர் செய்திருந்த ஏற்பாடு தாங்கள் நாடு திரும்ப வெகுவாக உதவியது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் நன்றியும் தெரிவித்தனர்.

அப்போது மாணவர் நவநீத ஸ்ரீராம், ‘‘எங்களுடன் மும்பை மாணவர்களும் வந்தனர். அவர்கள் தமிழக அரசுதான் மாணவர்களை மீட்பதில் சிறப்பான ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டு தெரிவித்தனர். தமிழக அரசை போல் எந்த மாநில அரசும் மீட்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்யவில்லை’’  என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, அந்த மாணவ-மாணவிகளிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உங்களுக்கு வேறு ஏதாவது உதவி வேண்டுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘நாங்கள் தமிழகத்திலேயே படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். அது தொடர்பாக, தான் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகில் இருந்த அதிகாரிகளிடமும் அது குறித்த விவரங்களை கேட்டு உடனே தெரிவித்தார்.

அதன் பின்னர், மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோரையும் அழைத்து, தன் அருகே நிற்க வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் விடைபெற்று கொண்டு மதுரை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார் முதல்வர்.