தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் ஏற்ற இறக்கத்துடன் பரவி வருகிறது. 

அதன் படி தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்றே அதிகரித்து வருகிறது. 

அத்துடன், தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், இந்த 9 ஆம் தேதி வரை, புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படாமல் அப்படியே ஊரடங்கு நீடிக்கப்பட்டது. 

ஆனால், சென்னையில் மக்கள் கூடும் சில பகுதிகளில் மட்டும் திடீரென சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. 

கொரோனா 2 வது அலை தொற்று ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 3 ஆம் அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. 

அதன் படி, வரும் 9 ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கையைப் பொருத்து, அந்தந்த மாவட்ட அதிகாரிகளே தேவையான கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள முதலமைச்சர் அனுமதி அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 9 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சற்று முன்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது, “கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறதா? அப்படி அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமா?” என்பது பற்றியும், இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, “ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்னும் அதிகரிப்பதா? அல்லது தளர்வுகளை வழங்குவதா?” என்பது குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கொரோனா தொற்று சற்று அதிகரிப்பதால், தமிழகத்தில் இன்னும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, இன்று மாலைக்குள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.