சென்னை அடையாறில் உள்ள பிரம்மகான சபாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று பொது வெளியில் நடை பயிற்சி மேற்கொண்ட போது, பொது மக்களிடம் கலந்துரையாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, தற்போது 68 வயது ஆனாலும், அவ்வப்போது தொடர்ந்து மிதிவண்டி பயிற்சி, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என தனது உடல் ஆரோக்கியத்தில் முழு கவனமும் செலுத்தி, தனது உடலை தொடர்ந்து கட்டுக்கோப்பாக வைத்திருந்து வருகிறார். 

அதே நேரத்தில், மிதிவண்டி பயிற்சி, நடைபயிற்சி, உடற்பயிற்சி என்று பொது வெளியில் பயணிக்கும் சமயங்களில் அவர் பொது மக்களிடம் கலந்துரையாடுவது உண்டு.

இந்த நிலையில் தான், சென்னை அடையாறில் உள்ள பிரம்மகான சபாவில் இன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன் நடைபயிற்சி மேற்கொண்டார். 

அப்போது, நடைப்பயிற்சி மேற்கொண்ட அந்த தருணத்தில் அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்ட பொது மக்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இயல்பாக உரையாடினார். 

அப்போது அவருடன் பேசிய ஒரு பெண்மணி, “சார் 2 வருடங்களுக்கு முன்பு உங்களை நான் ஏர்போட்டில் பார்த்தேன். அப்போது, நீங்கள் கட்டாயம் ஆட்சிக்கு வர வேண்டும்” என்று, அப்போதே உங்களிடம் கூறினேன்” என்று, குறிப்பிட்டார். 

“இப்போது, நீங்கள் ஆட்சிக்கு வந்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் பார்த்து பார்த்து செய்யுறிங்க. இதை நீங்கள் இப்படியே தொடர வேண்டும். 

கால்பந்து விளையாட ஸ்பெயின் சென்று உள்ள உங்கள் பேரன் வெற்றி பெற வேண்டும்” என்று, பெண் ஒருவர் முதலமைச்சரிடம் உற்சாகமாக உரையாடினார்.

இதனை சிரித்த முகத்துடன் முதலமைச்சர் கேட்டுக்கொண்டு, பதில் அளித்தார். 

இப்போது, அந்த பெண்ணிடம் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து முதலமைச்சர் விடை பெற முயன்றபோது, அந்தப் பெண் “கடைசியா ஒன்று சார்?” என்று, ஒரு கோரிக்கை போன்று பேசத் தொடங்கினார்.

அப்போது திரும்பிப் பார்த்த முதலமைச்சரிடம், “எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க?” என்று கேட்டார். 

இதனைக் கேட்டு சற்று சிரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்” என்று, பதில் அளித்திருக்கிறார்.

இதனைக்கேட்டு “ஆமாம் சார், யூடியூப்பில் உங்கள் வீடியோக்களை பார்க்கிறோம்” என்று, அந்த பெண்ணும் பதில் அளித்திருக்கிறார். இதனையடுத்து, முதலமைச்சர் அந்த பெண்ணிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

இப்படியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொது மக்களிடம் உரையாடிய இந்த வீடியோவை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவுடன், “ என்றும் மார்க்கண்டேயன்.. எங்கள் முதல்வர். இன்று காலை நடைப்பயிற்சியின் போது பொதுமக்கள் புகழாரம்..” என்றும், அசர் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவை, தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.