'சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளதாக' முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோவையில் வசித்துவந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி, நேற்று முன்தினம் அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நடத்திய விசாரணையில், அதாவது தற்கொலை செய்து கொண்ட மாணவி, மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேருவதற்கு முன்னதாக, சின்மயா வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு படித்மு வந்தார். 

அப்போது, மாணவிக்கு மிதுன் சக்ரவர்த்தி என்ற இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. வேறு பள்ளிக்கு மாறியும், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, வாட்ஸ் அப் மற்றும் மேசேஜ் மூலம் தொந்தரவு செய்ததால் மாணவி மனம் உடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. 

t1

இதனால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அந்த மாணவி எழுதியுள்ள கடிதத்தில், ''யாரையும் சும்மாவிடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா, எலிசா சாருவோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் முதற்கட்டமாக இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், மிதுன் சக்ரவர்த்தியை நேற்றிரவு கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை பிடிக்க இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவை பகுதியில் இச்சம்பவத்தை கண்டித்து மாணவர்களும், பெண்கள் அமைப்பும், பொது மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

t2

ஏற்கனவே கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பினர். 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!' என்று கூறியுள்ளார்.

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

— M.K.Stalin (@mkstalin) November 13, 2021