ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், “மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்வுகள் அளிக்கலாமா?” என்பது குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 வது அலையாக வேகம் எடுத்துக்கொண்டிருந்த சூழலுக்கு மத்தியில், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அடுத்த சில நாட்கள் முதல் ஏற்கனவே இருந்த ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கடுமையாக்கினார்.

அத்துடன், கடந்த மே 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவைத் தமிழகம் முழுவதும் பிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாகவே, இந்த முழு ஊரடங்கு உத்தரவானது, மேலும் 2 வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதன் காரணமாக, தமிழகத்தில் நாள் தோறும் 35 ஆயிரத்திற்கு மேல் பதிவான தினசரி கொரோனா பாதிப்பானது, தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கிற்குப் பிறகு, படிப்படியாகக் குறைந்து 20 ஆயிரத்திற்கும் கீழ் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாகவே, தமிழகத்தின் ஊரடங்கில் இருந்து கடந்த 7 ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பானது 17 ஆயிரமாக குறைந்து உள்ளது. 

குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து காணப்பட்டாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மட்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே உள்ளன. தற்போது, தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது 400 ஆக நீடிக்கிறது.

தற்போது, ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், “தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை” நடத்துகிறார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் 

டாக்டர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

முதலமைச்சருடன் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, மாவட்ட ஆட்சியளர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசிக்க உள்ளார். 

இப்படியான ஆலோசனைக்குப் பிறகே, அந்தந்த மாவட்டத்தில் உள்ள சூழல் குறித்து, கிடைக்கக்கூடிய புள்ளி விபரங்களின் படியே, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிடும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்பதும் இந்த கூட்டங்களுக்குப் பிறகு தான் தெரிய வரும் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.