கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

kiladi

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

மேலும் அந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன.  இந்நிலையில் கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் துவங்குகிறது. ஆகவே கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல, இரண்டாவது நகர நாகரீகம் இங்கு நிகழவில்லை எனக் கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர நாகரீகம் உருப்பெற்றது.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள், எழுதத் தெரிந்திருந்தார்கள் என்ற முடிவுக்கு தொல்லியில் துறை வந்துள்ளது.

மேலும் இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.