2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பத்திரிகையாளரொருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர்,

``அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் நடைபெறும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர்" என்று கூறினார்.

இந்நிலையில் அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்துவது, தொகுதியில் செல்வாக்கு மிக்கவர்களை அடையாளம் கண்டு புதிய பொறுப்புகள் அளிப்பது என சமீபத்தில் அதிமுக-வில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதனால், முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிக்காமலேயே அதிமுக களமிறங்கப்போகிறதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, ``என்றும் எடப்பாடி பழனிசாமியே முதல்வர்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜ், ``எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!

என்று கூறியுள்ளார்.

இதனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுகவின் உள்ளேயே முரண்பாடான கருத்து எழுந்துள்ளது உறுதியாகியுள்ளது.

ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்து, அமைச்சர் செல்லூர் ராஜுவின் நேற்றைய கருத்துக்கான பதிலடியா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

ராஜேந்திர பாலாஜி இதுபற்றி பேசும்போது, இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும், `முதல்வரும் - துணை முதல்வரும் ஆலோசித்து இதுபற்றி தெரிவிக்க வேண்டும்' எனக்கூறியுள்ளார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதுபற்றி பேசும்போது, முதல்வர் யாரென மக்கள் முடிவுசெய்வார்கள் என்று கூறியிருந்தார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை கவனத்தில் கொண்டே தமிழக அரசியல் கட்சிகள் கொரோனா ஊரடங்கிலும் மக்கள் சேவையாற்றி வருகின்றன.

இந்த நிலையில், அதிமுகவில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்ப்பு ஒருபுறமும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து அதிமுகவை கைப்பற்றுவாரா என்று மற்றொருபுறமும் அதிமுக பெருந்தலைகள்  உள்பட தொண்டர்கள் வரை அனைத்து தரப்பினரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கெனவே எடப்பாடிக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், ஓபிஎஸ் அல்லது சசிகலாவுக்கு ஆதரவாக முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சூழல் சரியாகும்பட்சத்தில், முதல்வர் வேட்பாளர் குறித்த முழு முடிவுகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.