கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விருது வழங்கினார்.

நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.  அதேபோல், தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழாவில் 4வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தேசியக்கொடியேற்றி வைத்தார். அப்போது, மூவர்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. மேலும், காவல் துறை இசை வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். இதனைத் தொடர்ந்து, சுதந்திர தின உரையை முதலமைச்சர் பழனிசாமி நிகழ்த்தினார்.

சுதந்திர தின உரையைத் தொடர்ந்து, பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, விருதுகளை வழங்கி கவுரவித்தார். 

சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய சில விருதுகள்.

* கொரோனா நோய் தொற்றின் சங்கிலியை உடைத்த சென்னை மாநகராட்சிக்கு நல் ஆளுமை விருது

* புதுமையான உத்தியை கையாண்டு நுண்ணீர் பாசனத்தில் சிறந்து விளங்கும் வேளாண் துறைக்கு நல் ஆளுமை விருது

* கொரோனா காலத்தில் தடையின்றி மருந்து கிடைக்க செய்த மருத்துவ சேவை கழகத்திற்கு நல் ஆளுமை விருது

* ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது தரப்பட்டது

துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது 3 பெண்களுக்கு வழங்கப்பட்டது.

* பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளிக்கு கல்பனா சாவ்லா விருது

* கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது

மாற்று திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது.

* சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளிக்கு தொண்டு நிறுவனத்திற்காக விருது

* சிறந்த சமூக பணியாளர் திருச்சி சாந்தகுமார், சிறந்த மருத்துவராக சேலம் சியாமளாவுக்கு விருது

* அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலாவிற்கு சிறப்பு நிறுவனத்திற்கான விருது

* சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி விருது வழங்கப்பட்டது

* கோவை கோதணவள்ளிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த சமூக பணியாளர் விருது

* கடலூர் கிரீடு நடனசபாபதிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த தொண்டு நிறுவன விருது

* உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.