சென்னையில் நேற்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை கொட்டித் தீர்த்த அதிகனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எதிர்பாராதவிதமாக நேற்று கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடக காட்சியளித்தன. சாலைகளில் ஓடிய மழைநீரால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று சென்னையில் மழை பெய்வது குறித்து எந்த ஒரு தகவலும் வானிலை மையத்தால் முன்பே அறிவிக்கப்படவில்லை என்பதால் திடீரென மழை பெய்வதற்கு காரணம் என்ன என்று பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. 

heavy rain chennaiஇந்நிலையில் இதுகுறித்து சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

“தரவுகளின் அடிப்படையில் தான் மழைப்பொழிவு கணக்கிடப்படுகிறது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று வேகமாக நகர்ந்ததால் சென்னையில் கனமழை பெய்தது. கடலில் இருக்கும் என கணிக்கப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பகுதிக்கு திடீரென நகர்ந்ததே அதி கனமழைக்கு காரணம். 

அதி கனமழையை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று தான் கனமழை பெய்யும் என எதிர்பார்த்தோம்.  இன்று கணிக்கப்பட்ட நிலையில் மேலடுக்கு சுழற்சி வேகமாக நகர்ந்ததால் நேற்றே மிக கனமழை பெய்தது. 

மேகவெடிப்பினால் மழை பெய்தால் அதிக நேரம் மழை பெய்யாது. ஆனால் நேற்று தொடர்ச்சியாக மழை பெய்தது. கணிப்புகளை தாண்டி காற்றின் நகர்வு மற்றும் வேகத்தால் மழையின் அளவு மாறுபடக்கூடும். 

நிலப்பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சி இருந்தது. திடீரென கடற்பகுதிக்கு நகர்ந்தது.   செயற்கைகோளில் இருந்த தரவுகளின் அடிப்படையில் நேற்று கணிப்பு வெளியிடப்பட்டது. 

அந்தமான் மற்றும் தமிழக கடற்பகுதியில் இருந்து தரவுகள் எடுக்கப்படுகிறது. காற்றின் வேகத்தை செயற்கைக்கோள் துல்லியமாக கணிப்பதில்லை. 

சில நேரங்களில் மழைப்பொழிவை துல்லியமாக சொல்ல இயலாது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய செயற்கைக்கோள் தரவுகளையும் சில நேரங்களில் பயன்படுத்துகிறோம்.

காற்றின் வேகம் மற்றும் சுழற்சியை சில நேரங்களில் துல்லியமாக கணிக்க இயலாது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று வேகமாக நகர்ந்ததால் சென்னையில் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒருசில நேரங்களில் வேகமாக நகர்ந்து விடும்.  

சென்னையில் நேற்று 10 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. 1977ஆம் ஆண்டிலேயே திடீரென அதிக மழை பெய்துள்ளது. மழை பெய்வதை துல்லியமாக கணிக்க ரேடார் உள்ளிட்ட  அதிநவீன உபகரணங்கள் சென்னையில் தேவை” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும், வடகிழக்கு பருவ காற்று இன்னும் தமிழக பகுதிகளை நோக்கி வீசுவதால் அவ்வப்போது ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும் பெய்யும் என்றும் புவியரசன் கூறியுள்ளார்.

heavy rainடெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும்,   உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் புவியரசன் தெரிவித்தார்.

மேலும் நாளை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும்,  உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.