“கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது என்றும், பொது மக்கள்  அலட்சியமாக இருக்கக்கூடாது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கொரோனா பரவலைக் கண்காணித்து, தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் வரும் 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில், நாளை முதல் தமிழகத்தில் இயல்பு வாழ்க்சை சற்று திரும்புகிறது. 

இந்நிலையில் தான், “கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது”  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவில், “கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளை முழுமையாகக் கடைபிடித்த நாட்டு மக்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களை தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மருத்துவ துறையைச் சார்ந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா தொற்றுப் பாதிப்பானது, இப்போது 4 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து வருகிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “நாட்டு மக்களிடம் நான் இப்போது சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்” என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது” என்று, தெரிவித்து உள்ளார்.

“இதனால், மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என்றும், கொரோனாவை வெல்வதற்குத் தடுப்பூசி தான் மிகப் பெரிய ஆயுதமும், கேடயமும்” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசிப் போட்டு முடிக்கவில்லை என்றும், ஒன்றிய அரசால் நமக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம் என்றும், இன்னும் அவர்களும் முழுமையாக நமக்கு வழங்கவில்லை” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி உள்ளார்.