“வரும் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள்” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பணி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ தேர்தலில் சீட் கிடைக்காதவர்களை அழைத்துப் பேசி, அவர்களை சமாதானம் செய்துவிட்டோம்” என்று, குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து, ஆட்சியில் இருக்கும் போதே அவற்றையெல்லாம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான்” என்றும், பெருமையோடு கூறினார். 

அப்போது, “தேர்தல் கருத்துக் கணிப்புகள்” குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குச் சிரித்துக்கொண்டே பதில் அளித்த முதலமைச்சர், “தேர்தல் முடிவுகள் குறித்து வெளியாகும் கருத்துக் கணிப்புகள் பொய்யானவை. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடையும் என கருத்து கணிப்புகள் கடந்த முறை வெளியானது. ஆனால், இரு தொகுதிகளிலும் அதிமுகவே அபார வெற்றி பெற்றது. அதனால், வரும் தேர்தலிலும் கருத்துக் கணிப்புகளைப் பொய் ஆக்குவோம்” என்று, சிரித்துக்கொண்டே கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, “திமுக 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று, மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே” என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, “ஸ்டாலினுக்கு என்ன ஜோசியமா தெரியும். 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என கூறுகிறார்” என்று, பதில் கேள்வி கேட்டு முதலமைச்சர் சிரிக்கத் தொடங்கினார். 

அத்துடன், “மழையாலும், புயலாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசின் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். மக்கள் தான் நீதிபதி, மக்கள் இந்த தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், “தேமுதிக கட்சி பக்குவம் இல்லாமல் பேசி வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதி உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும். உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனித்துப் போட்டியிடுவதில் தவறில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டு தவறாகப் பேசுவது நல்லதல்ல. கூட்டணியில் உடன்பாடு ஏற்படாமல் ஒரு கட்சியின் மீது பழி சுமத்துவது சரியல்ல” என்றும், முதலமைச்சர் பதிவு செய்தார்.

இதனிடையே, பல்வேறு முக்கிய அறிவிப்புகளுடன் அதிமுக வின் தேர்தல்  அறிக்கையானது இன்று மாலை 6 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.