“நீட் தேர்வு ரத்து, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பற்றி பிரதமரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக இன்று டெல்லி சென்றார். இன்று காலை தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற மு.க. ஸ்டாலினுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, சரியாக மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்குச் சென்றார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் உடன் சென்றனர். 

அப்போது, தமிழ்நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கிட்டதட்டக 30 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமரிடம் வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது, “தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க” வலியுறுத்தினார். 

அத்துடன், “தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, கொரோனா பேரிடர் நிதி, நிலுவை ஜிஎஸ்டி தொகை” குறித்து பிரதமரிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இப்படியாக, பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த சந்திப்பானது சுமார் 25 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், “பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று, தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “முதலமைச்சரான பிறகு முதல் முறையாக டெல்லி வந்து இருக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் மோடி என்னிடம் உறுதி அளித்து இருக்கிறார்” என்று, குறிப்பிட்டார். 

மேலும், “செங்கல்பட்டு தடுப்பூசி மையம் அமைப்பதை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளதாகவும், திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டதாகவும்” அவர் கூறினார்.

“மேகதாது திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும்” என்று, பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றும், அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, “தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு பிரதமரை வலியுறுத்தினேன்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறனார்.