15 வயது சிறுமிக்கு தாலி கட்டி 10 நாட்களாக குடும்பம் நடத்திய காதலனை, போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரவீன் என்ற இளைஞர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இளைஞர் பிரவீன், உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது, அதே மருத்துவமனையில், சென்னை எண்ணூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது மாமாவின் உடல் நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு அடிக்கடி அவரை பார்க்க வந்து சென்றார். 

அந்த நேரத்தில், அந்த 15 வயது சிறுமிக்கும், இளைஞர் பிரவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நட்பாகவும், பின்னர் அது காதலாகவும் மாறியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவரைத் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்தனர். போனில் மணிக்கணக்கில் பேசி, தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம், வீட்டில் சிறுமியின் தாயாருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சிறுமியை கடுமையாக கண்டித்து உள்ளார். அத்துடன், சிறுமியை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இதனால், அந்த சிறுமியின் மனதில், காதல் இன்னும் அதிகமானது.

இந்த நிலையில் தான், கடந்த வாரம் அங்குள்ள தேரடி பகுதியில் உள்ள தனது மாமா வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு, அந்த 15 வயது சிறுமி, தனது காதலன் பிரவீன் உடன் சென்று உள்ளார். 

சிறுமி வீட்டை விட்டு சென்று வெகு நேரமாகியும், அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த சிறுமியின் தாயார், சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் “தனது மகளைக் காணவில்லை” என்று, புகார் அளித்தார்.

அப்போது, தனது மகளின் காதல் விசயம் குறித்தும், போலீசாரிடம் புகாராக அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், மாயமான சிறுமி சென்னை பெரும்பாக்கத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு விரைந்து சென்ற போலீசார், பெரும்பாக்கத்தில் உள்ள சிறுமியின் பழைய வீட்டில் இருந்து சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். அத்துடன்,  சிறுமியுடன் அதே வீட்டில் இருந்த சிறுமியின் காதலன் பிரவீனையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், “இருவரும் மேல்மருவத்தூர் கோயிலில் திருமணம் செய்து விட்டு, சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள சிறுமியின் பழைய வீட்டில் கடந்த பத்து நாள்களாக குடும்பம் நடத்தி வந்தது” தெரிய வந்தது.

இதனையடுத்து, சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் பிரவீன் மீது, காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன் பிறகு, அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.