முகம் தெரியாத இளசுகள் செல்போனில் காதலித்து வந்த நிலையில், காதலி திடீரென்று செல்போனில் பேச மறுத்ததால் காதலன் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 22 வயதான துரை, அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இப்படி ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, ஒரு நாள் தனது செல்போனுக்கு ராங் கால் வந்து உள்ளது.

அப்போது, அந்த போனை எடுத்துப் பேசிய துரை, எதிர் முனையில் பேசிய பெண்ணை பேசியே மயக்கி உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, அந்த பெண்ணும், துரையும் அடிக்கடி அவர்களுக்குள் ராங் கல் செய்து பேசி வந்தனர். இதுவே, இவர்களுக்குள் காதலை வளர்த்து விட்டது.

இதனால், ஒருவரை ஒருவர் முகத்தைக் கூட பார்க்காத நிலையில், “காதல் கோட்டை” அஜித் - தேவயானி ஜோடியைப் போல், செல்போனிலேயே தங்களது காதலை வளர்த்துக்கொண்டு வந்தனர்.

இப்படி காதல் வளர்த்து வந்த நிலையில், திடீரென்று அந்த பெண், துரையுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த துரை, தன் காதலியைப் பல முறை பேச முயன்றுள்ளார். ஆனால், அந்த பெண் பேசாமல் துரையை முற்றிலும் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான துரை, என்ன செய்வது என்ற தெரியாமல், அந்த பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் நகரில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் 3 வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்து உள்ளார்.

துரை, மாடியிலிருந்து கீழே குதித்த வேகத்தில், அவருக்கு கால் மற்றும் கை முறிவு ஏற்பட்டதுடன், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதனையடுத்து, வலி தாங்க முடியாமல் துரை சத்தம் போட்டுக் கத்தி உள்ளார்.

துரையின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி பார்த்து உள்ளனர். அப்போது, துரை கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து உடனடியாக துரையை மீட்டு அங்குள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, துரைக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, படுகாயம் அடைந்த துரையிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போன் காதல் வெளிச்சத்திற்கு வந்தது. 

மேலும், செல்போனில் பேசி வந்த அவரின் காதலி, அவரின் பக்கத்து வீட்டில் தான் வசிக்கிறார் என்ற ஆச்சரியமான செய்தியையும் போலீசார் தெரிவித்தனர். 

இதனையடுத்து, போலீார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.