சென்னையில் உள்ள காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், 18 சிறுமிகள் அதிரடியாக மீட்கப்பட்டு உள்ளனர். 

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தனியாருக்குச் சொந்தமான “சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம்” என்கிற பெயரில், சிறுமிகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த தனியார் காப்பகத்தில் கல்யாணசுந்தரம் என்பவர் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இந்த காப்பகத்தில், 18 சிறுமிகள் தங்கி இருந்தனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 24 ஆம் தேதி இரவு 10 மணிக்கு 1098 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்ட பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், காப்பகத்தில் இயக்குனர் கல்யாணசுந்தரம் என்பவர் எங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகக் கண்ணீர் மல்க புகார் கூறினார்.

இது குறித்து புகாரைப் பதிவு செய்துகொண்ட அதிகாரிகள், இதனைக் காவல் துறையினருக்குத் தெரியப்படுத்தினர். இதனையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு தனிப்படை காவல் துறையினர் ஆகியோர், சம்பவ இடத்திற்குச் சென்று அதிரடியாக ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த காப்பகத்தில் இருந்த சிறுமிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சிறுமிகளுக்குத் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, காப்பகத்தில் வளர்ந்து வந்த 18 சிறுமிகளையும், அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட 18 சிறுமிகளும் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு, மீட்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கல்யாணசுந்தரத்தை, தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், சென்னையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

சென்னை விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகன் விக்னேஷ் என்பவர், அடிக்கடி தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் தனது வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த அந்த சிறுமியின் வாயைப் பொத்தி, தனது வீட்டிற்குத் தூக்கிச்சென்று விக்னேஷ், அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
 
இதனையடுத்து, அழுதுகொண்டே வீடு திரும்பிய சிறுமி, இந்த கொடூரச் செயல் குறித்து தனது பெற்றோருடன் கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.